காவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா?


காவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா?
x
தினத்தந்தி 6 Sep 2018 11:51 PM GMT (Updated: 6 Sep 2018 11:51 PM GMT)

புதுவை காவல்துறை தலைமையகத்தில் இளநிலை அலுவலராக பணியாற்றியவர் திடீரென மாயமானார். அவர் பணிசுமை காரணமாக மாயமானதாக தெரிகிறது.

புதுச்சேரி,

புதுவை நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் சூரிய சந்திரகுமார் (வயது 31). இவர் காவல்துறை தலைமையகத்தில் இளநிலை எழுத்தராக பணியாற்றினார். இவர் பணிச்சுமை காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாக தெரிகிறது.

இந்தநிலையில் சூரிய சந்திரகுமார் கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவருடைய பெற்றோர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய சந்திரகுமாரை தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் சூரிய சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிள் சிதம்பரம் பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அவர் உருவம் பதிவாகி இருந்தது. அதன்பின்பு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

அப்பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றியவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story