சமூக நலத்துறை இயக்குனரை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


சமூக நலத்துறை இயக்குனரை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2018 11:55 PM GMT (Updated: 6 Sep 2018 11:55 PM GMT)

நலவாரியம் அமைக்க கோரி சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அடிப்படை உரிமைகள், மாதாந்திர நலத்திட்ட உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு கிடைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நலவாரியம் அமைத்து அதற்கு தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஆட்சியாளர்களை சந்தித்து வலியுறுத்தினர். அப்போது கூடிய விரைவில் நலவாரியம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை தந்தை பெரியார் நகரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். அங்கு அவர்கள் சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு சங்க ஆலோசகர் சக்திவேல் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சங்க பிரதிநிதிகள் முத்துக்குமரன், ராஜ், கார்த்திகேயன், மன்னன், ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணியை அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முடியாத படி சிறைபிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிட மறுத்தனர். மேலும் துறையின் செயலாளர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து துறையின் செயலாளர் அலிஸ் வாஸ் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அரசிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story