நகைக்கடை அதிபர் வீட்டில் 15 பவுன் நகைகள், 14 கிலோ வெள்ளி கொள்ளை
சாமி கும்பிட காசிக்கு சென்ற நகைக்கடை அதிபர் வீட்டில் 15 பவுன் நகைகள், 14 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை கரிமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சங்கரன்(வயது 59). இவர் கான்சாமேட்டுத் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாமி கும்பிட காசிக்கு சென்றார். திரும்பி வந்து போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் கரிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 14¾ பவுன் நகைகள், 14 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வீட்டில் இருந்து ரோட்டில் சிறிது தூரம் சென்று விட்டு திரும்பி வந்தது. சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரை நகரில் தொடரும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அனைத்து பகுதியிலும் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கொள்ளையர்களும், நகை பறிப்பு திருடர்களும் போலீசார் கையில் சிக்குவதில்லை.
கடந்த ஒரு வாரத்தில் நகரில் பல்வேறு பகுதியில் மொத்தம் 54 பவுன் நகைகளும், 15 கிலோ வெள்ளி மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story