பொறியியல் படிப்பு எழுச்சி பெறுமா!
சமீப காலமாகவே பொறியியல் படிப்பு பற்றிய தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு முடிந்து ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையில் பொறியியல் படிப்புக்கு வேலைவாய்ப்பு குறைவு என்று மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான பார்வை. அதிகமான வேலைவாய்ப்பு உள்ள துறை பொறியியல் துறை தான். ஏறத்தாழ 70 சதவீத தொழில் நிறுவனங்கள் பொறியியல் துறை சார்ந்தவை.
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பொறியியல் பட்டதாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரிகளை போட்டி போட்டு கொண்டு வேலைக்கு அமர்த்தி அத்துடன் வேலைக்கான பயிற்சிகளையும் அளித்தார்கள். ஆனால் இன்றைய நிலை வேறு, வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்களும் தங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திறன் உடைய பொறியியல் பட்டதாரிகளை மட்டுமே வேலைக்கு அமர்த்துகிறார்கள். நிறுவனங்கள் அனைத்துமே புதிதாக வேலைக்கு சேரும் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க விரும்புவது இல்லை. ஆனால் பொறியியல் படிப்புகளில் மதிப்பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. படிக்கும் போதே திறன்களை வளர்த்துக் கொள்ளும் மாணவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும்போதே திறன்களை வளர்த்துக் கொள்வது சவாலான விஷயமாக உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம், பொறியியல் கல்வியின் பாடதிட்டம் மற்றும் அதையும் தாண்டி கடினமான தேர்வு முறை என்ற நிலையில் மாணவர்கள் தங்களது நேரம் முழுவதையும் தேர்வுக்கு தயாராவதிலேயே செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது.
சென்ற ஆண்டு முதல் பருவ தேர்வு முடிவில் சுமார் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள். பொறியியல் படிப்பில் எத்தனையோ எதிர்மறை கருத்துகள் இருந்த போதும், பொறியியல் கல்வி பயில ஆர்வத்துடன் வரும் மாணவர்களுக்கு இது போன்ற தேர்வு முடிவு மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கையை குறைக்கிறது.
பல்கலைக்கழகமும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மட்டுமே வைத்து தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் கல்லூரிகளும் தங்களது முழு நேரத்தையும் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கு செலவிடும் நிலை ஏற்பட்டு திறன்களை மேம்படுத்த முடியாமல் போகிறது. இன்றைய காலகட்டத்தில் திறன்கள் இல்லாத மதிப்பெண்களை கொண்ட கல்வி முறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரமுடியாது. எனவே பல்கலைக்கழகம் தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் திறன்களின் அடிப்படையிலான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டால் கல்லூரிகளும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவார்கள்.
இன்றைய போட்டி நிறைந்த உலகில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி ஆண்டு மருத்துவ பயிற்சி எடுத்துக் கொள்வது போல, பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களும் கடைசி ஆண்டு தொழில் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொள்வதை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் தொழில் நிறுவனங்களை பற்றியும் நிறுவனங்கள் என்ன மாதிரியான திறன்களை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். பொறியியல் படிப்பை படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்த கையுடன் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்றால் மாணவர்கள் படிக்கும் போதே தங்களின் திறன்களை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறீர்களோ, அந்த துறையில் உள்ள பாடங்களில் எது இன்றைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது என்று தெரிந்து கொண்டு அந்த பாடத்தில் அடிப்படையான விஷயங்கள் முதல் நவீன தொழில்நுட்பம் வரை தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் அந்த நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நான்காம் ஆண்டு வரும் போது நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கும் அதற்கான சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அவர்கள் துறைசார்ந்த வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம்.
இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பாடம் ரீதியான மினி புராஜக்ட் செய்ய வேண்டும். அது சம்மந்தமான ஆய்வு கட்டுரைகளை கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். இறுதி ஆண்டு வரும்போது அதை பிரதான மெயின் புராஜக்டாக உருவாக்கும் போது மாணவர்களின் திறன்கள் வெளிப்பட வாய்ப்பாக அமைகிறது.கல்லூரிகளும் பொறியியல் மாணவர்களின் புராஜக்ட் மூலமாக அவர்களின் கண்டுபிடிப்புகளை சுயமாக செய்ய வைத்து அதை சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் உருவாக்க வேண்டும். ‘இன்னோவேட்டிவ் புராஜக்ட் சென்டர்’களை கல்லூரியிலேயே அமைத்து நல்ல கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவர்களை தொழில்முனைவோர் ஆக்கும் முயற்சி எடுத்தால் அதன் மூலமாக சிறிய தொழில் நிறுவனங்களை உருவாக்க முடியும். இதன் மூலமாக பல பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெற முடியும்.
பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தி, ஆங்கில உரையாடல் திறன், குழு விவாதத்தில் பேசுவது மற்றும் ஆளுமை திறன்களை வளர்த்துக் கொள்வதை பற்றி பயிற்சி அளிப்பதை முக்கியமாக கொண்டு பல்கலைக்கழகமும் கல்லூரிகளும் திறன்கள் மேம்பட பயிற்சி அளித்தால் பொறியியல் படிப்பு எழுச்சி பெறும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் அ.முகமது அப்துல்காதர்
Related Tags :
Next Story