நாகரிகம் வளர்ந்த முறை
மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியால், வேற்று கிரகங்களிலும் மக்கள் குடியேறி வசிக்கக்கூடிய அளவிற்கு ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய விஞ்ஞான வளர்ச்சி என்பது திடீரென நிகழ்ந்து விடவில்லை.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாக காணப்படுகிறது. அந்த வகையில் பிரமாண்டமான ஒரு துறையாக விஞ்ஞானம் பலவிஷயங்களிலும் ஊடுருவி இருப்பதை காணலாம். இத்தகைய உயரிய நிலையினை அடைய அரிய பங்களிப்பினை வழங்கியது நாகரிகங்கள் என்றால் அது மிகையாகாது.
நாகரிகம் என்பது பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். நாகரிகம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் ‘சிவலைசேஷன்’ என்று கூறுவர். ‘சிவலைஸ்’ எனும் லத்தீன் வார்த்தையே, ஆங்கிலச் சொல்லின் அடிப்படையாகும். ‘சிவலைஸ்’ என்றால் குடிமகன், நகரவாசி என பொருள்படும். இந்த அடிப்படையில் மனிதன் சமுதாயமாக வாழ ஆரம்பித்ததுதான் நாகரிக தொடக்கம் என்று சிலர் கூறுவர்.
இந்த வகையில் நாகரிகமானது, மனிதன் விலங்குகளை வேட்டையாடி சமைக்காமல் உண்ட காலத்திலிருந்தே தொடங்கிற்று. பின்னர் அது படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது.
ஸ்காட்லாந்தின் தத்துவ மேதையும், வரலாற்று நிபுணருமான ஆடம் பெர்கூசன் 1767-ல் எழுதிய ‘என் எஸ்ஸே ஆன் தி ஹிஸ்டரி ஆப் சிவில் சொசைட்டி’ எனும் புத்தகத்தில் நாகரிகம் என்றால் தனிமனிதன் குழந்தை பருவத்தில் இருந்து, மனித தன்மை உடையவனாக வளர்ச்சியடைவது மட்டுமல்ல, மனித இனமே முரட்டுத்தனத்தில் இருந்து பண்பாட்டுக்கு முன்னேறுவது, என்கிறார்.
அகழ்வாராய்ச்சி, ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில பழங்கால நாகரிகங்களை முதிர்ச்சி பெற்றவைகளாக சொல்லலாம்.
அந்த வகையில் ஆரம்ப கால நாகரிகங்களாக மொசப்பட்டோமிய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம், ரோமன் நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் போன்ற பல்வேறு நாகரிகங்கள் உள்ளன.
Related Tags :
Next Story