கடம்பூர்–குருமலை இடையே ரூ.2.43 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


கடம்பூர்–குருமலை இடையே ரூ.2.43 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Sep 2018 10:30 PM GMT (Updated: 7 Sep 2018 12:57 PM GMT)

கடம்பூர்–குருமலை இடையே ரூ.2.43 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கயத்தாறு,

கடம்பூர்–குருமலை இடையே ரூ.2.43 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

புதிய சாலை

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் இருந்து குருமலை வரை 7.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 43 லட்சத்து 8 ஆயிரம் செலவில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக அரசு தினமும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது. தற்போது கடம்பூர்–குருமலை இடையே புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று குருமலை–கோவில்பட்டி இடையே 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

பஸ் நிறுத்த நிழற்குடை

பின்னர் கடம்பூர் அருகே சொக்கலிங்கபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் செலவில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், யூனியன் ஆணையாளர்கள் முத்துகுமார், சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், கடம்பூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, கயத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story