விவசாய நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய பழங்குடியின மக்கள்
விவசாய நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளின் கால்களில் விழுந்து பழங்குடியின மக்கள் கெஞ்சினார்கள்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், பவானிசகர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம் என 7 வனச்சரகங்கள் சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடங்கும். இந்தநிலையில் வனப்பகுதியை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க வனசுற்றுலா திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.
இதற்காக பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியின சுற்றுலா கலாச்சார கிராமம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பழங்குடியின கிராமத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வாழும் பழங்குடி மக்கள் 100 குடும்பத்தினரை கொண்டுவந்து குடியேற்றம் செய்யப்பட உள்ளது. இதை செயல்படுத்த அரசு ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்தநிலையில் தற்போது இந்த திட்டத்தை பவானிசாகர் வனப்பகுதியில் செயல்படுத்தாமல், தலமலை கிராமத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பழங்குடியின மக்கள் விவசாயம் செய்துவந்த 52 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து அருங்காட்சியகம் அமைக்கப்படும் இடத்தை பார்வையிட சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உபத்யா, ஈரோடு மாவட்ட வருவாய்துறை அதிகாரி கவிதா ஆகியோர் நேற்று தலமலைக்கு சென்றார்கள். அப்போது பழங்குடியின தலமலையில் அருங்காட்சியகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டார்கள்.
மேலும் அவர்கள் அதிகாரிகளிடம், ‘பழங்குடியின மக்களான நாங்கள் 25 குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். இதற்காக கடந்த 70 ஆண்டுகளாக கந்தாயம் கட்டி வருகிறோம். இந்த நிலங்களில் மழைகாலங்களில் ராகி, எள்ளு, சோளம் பயிர்செய்கிறோம். இதுதான் எங்களுடைய வாழ்வாதாரம். இங்கு அருங்காட்சியகம் அமைக்க நிலத்தை விட்டுத்தர மாட்டோம் என்றார்கள்.
அப்போது சில பெண்கள் எங்கள் நிலத்தை பறிக்காதீர்கள் என்று அதிகாரிகளின் கால்களில் விழுந்து கெஞ்சி கதறி அழுதார்கள்.
அதன்பின்னர் அதிகாரிகள் பழங்குடியின மக்களிடம், ‘நீங்கள் விவசாயம் செய்யும் நிலத்தை நாங்கள் கையகப்படுத்த மாட்டோம். புறம்போக்கு நிலத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம். நீங்கள் பயன்படுத்தி வந்த நிலத்துக்கான ரசீதுகள், சான்றிதழ்களை நாளை தாளவாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள்‘ என்றார்கள்.
அதை ஏற்றுக்கொண்டு பழங்குடியின மக்கள் கலைந்து சென்றார்கள்.