மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 29–ம் ஆண்டு தொடக்க விழா முன்னாள் துணை வேந்தர்கள் பங்கேற்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29–ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது.
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29–ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் முன்னாள் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.
29–ம் ஆண்டு தொடக்க விழாநெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 29–வது ஆண்டு தொடக்க விழா பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் நேற்று நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ்பாபு வரவேற்று பேசினார்.
பத்மபூஷன் விருது பெற்றவரும், மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னாள் செயலாளருமான ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
துணைவேந்தர் பாஸ்கர் பேச்சுநிகழ்ச்சியில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பேசும் போது, “இந்த பல்கலைக்கழகம் கடந்த 1990–ம் ஆண்டு செப்டம்பர் 7–ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்று கொடுத்து வருகிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தற்போது 28 ஆண்டுகள் நிறைவடைந்து, 29–ம் ஆண்டு தொடங்கி உள்ளது. முன்னாள் துணைவேந்தர்களின் ஒத்துழைப்புடன் புதிய கட்டிடங்கள், நூலகம், புதிய துறைகள், சூரிய மின்உற்பத்தி, மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன “ என்றார்.
முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முசுந்தரம் பேசுகையில், “இந்த பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். இந்த பல்கலைக்கழகம் மேலும் மேலும் வளர வேண்டும். இங்கு வந்த போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய தமிழ் அறிஞர் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகம் பெயர் அமைக்கப்பட்டது தமிழ் அறிஞர்களுக்கு பெருமையாக உள்ளது. உலக அறிஞர்கள், சிறந்த முன்னாள் மாணவர்கள் அறிவு, ஆற்றலை இந்த பல்கலைக்கழகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய வளர்ச்சிமுன்னாள் துணைவேந்தர் சொக்கலிங்கம் பேசுகையில், “நான் துணைவேந்தராக இருந்த போது இந்த அளவுக்கு வசதிகள் இல்லை. சர்வதேச அளவில் நடைபெறும் கருத்தரங்கம் கூட வெளியே உள்ள ஓட்டல்களில் நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கலையரங்கம் கட்டப்பட்டது. தற்போது பல்கலைக்கழகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவது பெருமை அளிக்கிறது“ என்றார்.
முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசுகையில், “நான் பொறுப்பு வகித்து இருந்த போது, இந்த பல்கலைக்கழகத்துக்கு ஏ கிரேடு வாங்க வேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தேன். ஆனால் அது நிறைவேற இல்லை,. தற்போது “ஏ“ கிரேடு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலன் கருதி மத்திய– மாநில அரசுகள் நமது பல்கலைக்கழகத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். உயர் கல்வி கற்கும் வாய்ப்பு, சமூக நீதி அடிப்படையில் கிடைக்கும் போது, அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்“ என்றார்.
மனோஜ் பாண்டியன்முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் பேசுகையில், “எனது தாயார் சிந்தியா பாண்டியன் சார்பில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் என்பதில் பெருமையாக இருக்கிறது. கடந்த 2003–ம் ஆண்டு நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது பல்கலைக்கழகத்தில் செனட் அரங்கம் திறக்கப்பட்டது. அந்த விழாவுக்கு வந்தேன். அதற்கு பிறகு எனக்கு இந்த பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது எனது தாயார் மூலம் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு ஏ கிரேடு கிடைத்தற்கு எனது தாயாரின் பங்கு உண்டு. இந்த பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போல் சிறந்து விளங்க வேண்டும்.“ என்றார்.
தொடர்ந்து பல்கலைக்கழக துறை மாணவர்களுக்கு, எம்.ஜி.ஆர் அறக்கட்டளை சார்பில் விருதுகளும், ஆய்வு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைத்து துணைவேந்தர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.
முடிவில் பேராசிரியர் மாதவன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.பெருமாள்சாமி. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.