வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
கடலூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.
கடலூர்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் சிறிது தூரம் நடந்து சென்றார்.
இதில் கலந்துகொண்ட மாணவ–மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் பிடித்து இருந்தனர். கடலூர் ஜவான்பவான் பில்டிங் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி அண்ணாபாலம், பாரதிசாலை வழியாக மஞ்சக்குப்பம் டவுன்ஹாலை சென்றடைந்தது.
இதில் சப்–கலெக்டர் சரயூ, செய்தி–மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், தாசில்தார் ஜெயகுமார், தேர்தல் தாசில்தார் பாலமுருகன், துணை தாசில்தார்கள் துரைராஜ், ராஜேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் அசோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், கிராமநிர்வாக அலுவலர்கள் ஓம்சத்தியரேகா, இளையராஜா, புனித வளனார் கல்லூரி முதல்வர் சின்னப்பன், நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தராஜ், திட்ட அலுவலர் அன்னம்மாள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் கடந்த 1–ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 31–ந் தேதிவரை நடக்கிறது. இது தொடர்பான அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களிலும் மற்றும் நியமனம் செய்யப்பட்ட இடங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர ஏனை நாட்களில் விண்ணப்பங்கள் வாங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர்களின் கூடுதல் வசதிக்காக இன்று(சனிக்கிழமை), வருகிற 23–ந் தேதி மற்றும் அடுத்த மாதம்(அக்டோபர்) 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் எண்–6, நீக்கம் செய்திட படிவம் எண்–7, வாக்காளர் விவரங்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய படிவம் எண்–8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் எண்–8 ஏ ஆகியவற்றை வாங்கி நிரப்பி கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள் வாக்காளர் சிறப்பு பணிகள் மற்றும் சிறப்பு பணிகள் தொடர்பான தங்களது சந்தேகங்கள் மற்றும் புகார்களை கடலூர் சப்–கலெக்டர் அலுவலகம்– 04142 231284, சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம்– 04144 222256, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் 04143 260248, மாவட்ட கலெக்டர் அலுவலகம் 04142 230652 ஆகிய டெலிபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.