வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகை கொள்ளை


வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 8 Sept 2018 3:15 AM IST (Updated: 8 Sept 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமானூர்,


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). இவர் கட்டிடப்பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன், பின்புறமுள்ள கதவுகளை அடைத்து விட்டு தனது மனைவி சந்திரகலா(32), மகள் அபிநயா ஆகியோருடன் வீட்டின் முன்பக்க அறையில் தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென்று மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து கொண்டு, வீட்டின் உள்ளே நுழைந்தனர். அறையில் தூங்கி கொண்டிருந்த சந்திரகலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியையும், அவரது மகள் அபிநயா கழுத்தில் கிடந்த 1¼ பவுன் சங்கிலியையும் கொள்ளையடித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சந்திரகலாவும், அபிநயாவும் கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலிகள் காணாததால் அதிர்ச்சியில், திருடர்கள், திருடர்கள் என்று சத்தம் போட்டனர். இந்த சத்தத்தை கேட்டு எழுந்த ராமச்சந்திரன் தப்பியோடிய மர்மநபர்களை தேடி, அவர்கள் பின்னால் ஓடினார். ஆனால் மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் அறையில் ராமச்சந்திரன் வைத்திருந்த பணமும் திருட்டு போயுள்ளது. ஆனால் எவ்வளவு பணம் திருட்டு போனது என்று தெரியவில்லை.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், திருட்டு போன வீட்டில் பெரம்பலூர் கைரேகை நிபுணர் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சிவமணி தலைமையிலான போலீசார் கைரேகைகளை சேகரித்து சென்றனர். மலர் என்ற போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிலிருந்து, கோவிலூர் பஸ் நிலையம் வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாய், மகள் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story