அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்


அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 8 Sept 2018 3:30 AM IST (Updated: 8 Sept 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கணேஷ் பேசினார்.

புதுக்கோட்டை,


புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு, பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக இத்தகைய தொற்று நோய்களின் தாக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டுகளில் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து கொசுக்களின் மூல ஆதாரங்களை அழித்தல் மற்றும் பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டதன் மூலம் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்களின் தாக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுப்பட்டில் இருந்தது.

இதேபோல நடப்பாண்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு மற்றும் குடி நீரால் பரவும் நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதே நிலையை தொடர செய்யும் வகையில் கடந்த ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கான மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவையான அளவு களப்பணியாளர்களை பணியில் அமர்த்தி ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் வினியோகம் செய்யப்படும் குடிநீரினை குளோரினேசன் செய்யப்பட்ட பின்னரே வினியோகம் செய்ய வேண்டும். இதேபோன்று அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த பணிகளை சிறப்பாக செய்து தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் கடமையாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகண்ணன், பொது சுகாதார துணை இயக்குனர் பரணிதரன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, நகராட்சித்துறை, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story