சத்துணவில் அட்டை பூச்சி கிடந்ததால் தொடக்கப்பள்ளி முற்றுகை


சத்துணவில் அட்டை பூச்சி கிடந்ததால் தொடக்கப்பள்ளி முற்றுகை
x
தினத்தந்தி 7 Sep 2018 11:30 PM GMT (Updated: 2018-09-08T02:02:45+05:30)

அழகாகவுண்டனூர் கிராமத்தில் சத்துணவில் அட்டை பூச்சி கிடந்ததால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு சமையல் கூடத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அழகாகவுண்டனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு சமைத்து பரிமாறப்பட்டது. அப்போது சத்துணவில் அட்டைபூச்சி விழுந்து இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவ-மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறி உள்ளனர். இதையடுத்து குழந்தைகளுக்கு வழங்கிய சத்துணவு கீழே கொட்டப்பட்டது. பின்னர் வேறு உணவு சமைத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் சத்துணவில் அட்டை பூச்சி கிடந்த தகவலை தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நேற்று காலை குழந்தைகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் சுகாதாரமான முறையில் சத்துணவு சமைத்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சமையல் கூடத்திற்கு பூட்டு போட்டு சமையலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், குழந்தைகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுத்தமாக சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story