மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் கைது + "||" + On track Cement board ITI 3 people arrested

தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் கைது

தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் கைது
வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 2 முறை சிமெண்டு பலகைகளை வைத்த ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையத்திற்கும், பெருங்குடி ரெயில் நிலையத்துக்கும் இடையே கடந்த 30-ந் தேதியும், 4-ந் தேதியும் யாரோ மர்மநபர்கள் ரெயில் தண்டவாளத்தில் சிமெண்டு பலகையை வைத்து இருந்தனர். அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் சக்கரம் அதன் மீது ஏறியதால் பலத்த சத்தத்துடன் அந்த சிமெண்டு பலகை உடைந்தது.


அதிர்ஷ்டவசமாக இந்த 2 சம்பவங்களிலும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுபற்றி திருவான்மியூர் ரெயில்வே போலீசில் வேளச்சேரி ரெயில் நிலைய அதிகாரி கண்ணன் புகார் செய்தார்.

தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வந்து வேளச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து பெருங்குடி செல்லும் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து 2 முறை இரவு நேரத்தில் தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைக்கப்பட்டு இருந்ததால் யாராவது ரெயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் இரவு நேரங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் மாறுவேடங்களில் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், பெருங்குடி, குன்றத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேர் தான் 2 முறையும் தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைத்தனர் என்பது தெரியவந்தது. 3 மாணவர்களையும் ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில், நண்பரின் பிறந்தநாள் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சிமெண்டு பலகைகளை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பிகளை எடுத்து விற்றதாகவும், அப்போது விளையாட்டாக சிமெண்டு பலகைகளை ரெயில் தண்டவாளத்தில் வைத்ததாகவும் தெரிவித்தனர். போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறும்போது, “ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. பறக்கும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.