முக்கொம்பு கொள்ளிடம் அணை: மணல் மூட்டைகளை தண்ணீர் அடித்துச் சென்றதால் பெரும் பரபரப்பு
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணியின்போது, மணல் மூட்டைகளை தண்ணீர் அடித்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
திருச்சி,
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணயில் வெள்ளப்பெருக்கினால் 9 மதகுகள் இடிந்து விழுந்தன. மதகுகள் உடைந்த பகுதி வழியாக தண்ணீர் வெளியேறி வீணாக கடலுக்கு சென்று கொண்டிருந்தது. இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெறும் என அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கின. பெரிய பாறாங்கற்கள் மூலம் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையின் முதல் மதகில் இருந்து 14-வது மதகு வரை சாலை அமைக்கும் பணியும் இரவு, பகலாக நடந்து வருகிறது. 13-வது மதகு ஏற்கனவே உடைந்து விட்டதால், எந்திரங்களின் உதவியுடன் அதன் ஒரு பகுதியை அகற்றி இருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த மதகின் மீதி இருந்த பகுதி முழுவதும் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிந்து விழுந்த பகுதி வழியாக தண்ணீர் அதிகளவில் வெளியேறியது.
இதனால் ஏற்பட்ட அரிப்பை தாங்க முடியாமல் நேற்று காலை 11.30 மணி அளவில் 13-வது மதகிற்கும், 14-வது மதகிற்கும் இடைப்பட்ட பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் அப்படியே சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதைப்பார்த்து அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அலறியடித்த படி தென் கரையில் இருந்து வடகரைக்கு ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, சுமார் 30 நிமிட நேரம் தற்காலிக சீரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கின. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடிப்பதற்கு வசதியாக 16-வது மதகில் இருந்து 45-வது மதகு வரை உள்ள மதகுகளின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் தண்ணீர் கடல் அலைபோல் சென்றது.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர் வளர்மதி, ப.குமார் எம்.பி., கலெக்டர் ராஜாமணி ஆகியோர் நேற்று மதியம் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே உடைந்த நிலையில் இருந்த 13-வது மதகின் ஒரு தூண் மட்டும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் உடைக்கப்பட்டது. அந்த தூண் தண்ணீருக்குள் அப்படியே விழுந்தது. அதன் மேல்பகுதியிலும் தொடர்ந்து பாறாங்கற்கள் கொட்டப்பட்டு வந்தன. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மதகுகள் உடைந்த பகுதியில் தண்ணீர் வெளியேறுவது 99 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
Related Tags :
Next Story