2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்


2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
x
தினத்தந்தி 7 Sep 2018 10:00 PM GMT (Updated: 7 Sep 2018 11:28 PM GMT)

கடைமடைக்கு போதிய அளவில் காவிரிநீர் செல்லாததால் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாய நிலையில் உள்ளது. இருக்கும் பயிர்களை காப்பாற்ற டீசல் என்ஜின் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்.

காட்டுமன்னார்கோவில், 


கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கடந்த மாதம் 26-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியை வேகமாக எட்டியது. தொடர்ந்து கீழணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் காவிரியின் கடைமடை பகுதியான வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் 27-ந் தேதி வந்தது. அன்று முதல் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக(உச்ச நீர்மட்டம் 47.50 அடி) உயர்ந்தது. இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து குடிநீருக்காக சென்னைக்கும், பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கிழணையில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாற்றில் பாசனத்துக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கடைமடைக்கு போதிய அளவில் காவிரிநீர் செல்லவில்லை.

வடக்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பாசனம் பெறும் மா.உடையூரான் வாய்க்கால் மூலம் எடையார், வவ்வால்தோப்பு, பிள்ளையார்தாங்கல், திருநாரையூர் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். காவிரிநீரை நம்பி 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் போதிய தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போது கடைமடை பகுதிக்கு போதிய தண்ணீர் செல்லவில்லை. இதனால் சில இடங்களில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் கருகின. பல இடங்களில் நெற்பயிர்கள் கருகும் அபாய நிலையில் உள்ளன. எனவே அந்த நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக சில விவசாயிகள் ஒன்று சேர்ந்து வாடகைக்கு டீசல் என்ஜினை வாங்கி வந்து, வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரை பாய்ச்சுகிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டோம். கடந்த 4 நாட்களாக போதிய அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்திருந்த நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. எனவே டீசல் என்ஜினை வாடகைக்கு எடுத்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். தற்போது டீசல் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.77.90 கொடுத்து வாங்குகிறோம். இருக்கிற பயிரை காப்பாற்ற வேறு வழியின்றி டீசலை வாங்கி, அதன் மூலம் என்ஜினை இயக்கி தண்ணீரை பாய்ச்சுகிறோம்.

கடந்த மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கிராமங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அதிகளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. தற்போது தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகுவதை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.

கீழணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 650 கனஅடிநீர் திறந்து விடலாம். ஆனால் வினாடிக்கு 300 கனஅடிநீர்தான் வருகிறது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. வாய்க்காலில் முழு கொள்ளளவு தண்ணீரையும் திறந்து விட வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் முறைப்படுத்தப்பட்ட பாசனம் அமைக்க வேண்டும். இதனை கண்காணிக்க கூடுதலாக பொதுப்பணித்துறை பாசன உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றனர். 

Next Story