பின்னடைவில் ஒரு நன்மை


பின்னடைவில் ஒரு நன்மை
x
தினத்தந்தி 8 Sep 2018 10:09 AM GMT (Updated: 8 Sep 2018 10:09 AM GMT)

ஆசிய விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் இந்தியாவுக்கு நிச்சயமாக தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தரக்கூடிய விளையாட்டாக இதற்கு முன்புவரை கபடி இருந்தது. இன்று அந்த நிலை மாறிவிட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் இரு கபடி அணிகளையும் மண்டியிட வைத்திருக்கிறது, ஈரான்.

இந்திய கபடிக்கு இது நிச்சயம் ஒரு பின்னடைவுதான், கபடியின் தாயகமாக, கபடியை நேசிக்கும் தேசமாக நமக்கு இது ஏமாற்றமும் அதிர்ச்சியும் தரும் விஷயம்தான். ஆனால் இன்னொரு வகையில் பார்த்தால், இது கபடியின் வளர்ச்சிக்கு வழிகோலும் விஷயம்.

இந்தியா என்ற இரும்புக்கோட்டையைத் தகர்த்து கபடியில் முன்னணி இடத்துக்கு முன்னேற முடியாது என்று நினைத்திருக்கும் நாடுகளுக்கு புது உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் தற்போதைய மாற்றம் தந்திருக்கும். அதேநேரம் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கும், இனியும் ‘இது நம்ம விளையாட்டு’ என்று சாதாரணமாக போய் களமிறங்க முடியாது, நம்மை மென்மேலும் மேம்படுத்திக்கொண்டே இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற உண்மையை உணர்த்தியிருக்கும்.

கடந்த பல ஆண்டுகளாக கபடியில் இந்தியாவுடன் நெருக்கமாக போட்டியிட்டு வந்த ஈரான், தற்போது முந்திக் காட்டிவிட்டது, ஆசிய விளையாட்டில் இந்தியாவின் 28 ஆண்டுகால வெற்றி வரலாற்றை புரட்டிப் போட்டுவிட்டது.

முதலில், கபடியில் இந்தியாவின் பிரதான எதிராளி என்ற இடத்தில் இருந்து பாகிஸ்தானை ஈரான் இடம் நகர்த்தியது. இன்று, இந்தியாவுக்கு எதிராகவே தொடை தட்டி நிற்கிறது.

ஈரானியர்கள் மட்டுமல்ல, தென்கொரியர்களும் இன்று கபடியில் இந்தியாவுக்குச் சவால் விடும் வகையில் வளர்ந்துவிட்டதைக் கவனிக்க வேண்டும். இந்த ஆசிய விளையாட்டில் ஆரம்ப சுற்றுப் போட்டியில் தென்கொரியாவுடனும் பரபரப்பான போட்டியில் இந்தியா வீழ்ந்தது.

இந்திய ஆண்கள் அணிக்கு எதிராக தென்கொரியா பெற்ற வெற்றியிலும், இந்தியப் பெண்கள் அணிக்கு எதிராக ஈரான் பெற்ற வெற்றியிலும் ‘இந்தியர்களின்’ பங்கு இருக்கிறது.

ஈரான் பெண்கள் அணியின் பயிற்சியாளர் ஷைலஜா ஜெயின், தென் கொரிய ஆண்கள் அணியின் பயிற்சியாளர் அஷன்குமார் சங்வான் ஆகிய இரு இந்தியர்களைத்தான் கூறுகிறோம்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முதலாக 1990-ல் கபடி அறிமுகப்படுத்தப்பட்டபோது தங்கம் தட்டிவந்த இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர், அஷன்குமார்.

இந்த ஆசிய விளையாட்டு கபடி அரை இறுதிப் போட்டிக்குப் பின் நம் எல்லோரையும் போல அஷன்குமார் முகத்திலும் ஏமாற்றம் படிந்துவிட்டது.

‘‘இந்தத் தோல்வி, இந்தியர்களாகிய நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான விஷயம். கபடி களத்தில் புலி போல பாய்ந்தவர்கள் நாம். இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், ஏதோ பலவீனம் இருக்கிறது என்று அர்த்தம். இந்திய அணி, வீரர்கள் எல்லாம் பலமாகத்தான் தோன்றின. ஆனால் அவர்கள் விளையாடிய விதத்தில் தவறு நேர்ந்துவிட்டது.’’

ஒரு சுவாரசியமான விஷயம், இந்தியாவை தோற்கடித்த பின் தென்கொரிய வீரர்கள் அஷன்குமாரிடம் மன்னிப்புக் கேட்டார்களாம்.

அதேநேரம், இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகளை எதிர்கொண்ட ஈரான் பெண்களிடம், தன்னை தங்கப் பதக்கமின்றி இந்தியாவுக்கு அனுப்பிவிடாதீர்கள் என்று ஷைலஜா கூறினாராம்.

ஈரானிய, தென்கொரிய வீரர், வீராங்கனைகளின் சிறப்பான உடல்தகுதியும் அவர்களுக்கு ஓர் அனுகூலமாக அமைந்தது என அந்த அணிகளின் இந்தியப் பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புரோ கபடி லீக்கில் ஆடக் கிடைத்த வாய்ப்பு வெளிநாட்டு வீரர்களுக்கு இந்தியர்களின் சில உத்திகளைக் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தைத் தந்திருப்பதாகக் கூறும் அவர்கள், அவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் இத்தொடர் உதவியிருக்கிறது என்கின்றனர்.

நம்முடைய கபடியை பிற நாட்டவர் தங்கள் விளையாட்டுப் போல கருதுவதும், விளையாடுவதும் நமக்கு சந்தோஷமளிக்கும் விஷயமே.

உதாரணமாக, கொரிய வீரர் சியோங் ரியோல் கிம், ‘கொரிய கபடி கா கவுரவ்’ (கொரிய கபடியின் பெருமை) என்று மார்பில் பச்சை குத்தியிருந்தார்.

இனி இந்தியா மோதும் சர்வதேச கபடிப் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும்!

Next Story