பேரையூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் பஸ் மறியல்
பேரையூர் அருகே குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் பஸ் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது எஸ்.கீழப்பட்டி.இந்த ஊராட்சியில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதிக்கு மலை அடிவாரத்தில் இருந்து ஆழ்குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் குடிநீர் வழங்கப்படவில்லை. மின்மோட்டார் பழுது, கூட்டுக்குடிநீர் சரிவர வராததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீருக்கு அவதிப்பட்டு வந்தனர். அருகில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து சிரமப்பட்டனர்.ஊராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஒன்றிய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி இக்கிராம மக்கள் நேற்றுகாலை பேரையூர்வத்திராயிருப்பு சாலையில் காலி குடங்களுடன் பஸ் மறியல் செய்தனர்.இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. சம்பவம் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குடிநீர் வசதி குறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் எடுத்து கூறி குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று கூறிய உடன் சாலை மறியலை கிராமமக்கள் கைவிட்டனர்.இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல சந்தையூர் மேற்குதெரு, தெற்குதெரு ஆகிய பகுதிகளில் 300 பேர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு தேன்மலையாண்டி கோவில் பகுதியில் இருந்து ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் நிறுத்தப்பட்டது. மேலும் கூட்டுகுடிநீர் வசதியும் இப்பகுதி மக்களுக்கு செய்து தரப்படவில்லை. தங்களுக்கு போதிய அளவில் குடிநீர் கிடைக்கவில்லை, தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கூறி பேரையூர்–மேலப்பட்டி சாலையில் இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒன்றிய நிர்வாகத்துடன் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். சாலை மறியல் கைவிடப்பட்டது. அப்போது குடிநீர் வசதி செய்து தரவில்லை என்றால் மீண்டும் சாலை மறியல் செய்வோம் என்று இந்த 2 கிராமமக்களும் தெரிவித்தனர்.