மதுரை மத்திய சிறை பெண் சூப்பிரண்டுக்கு ‘வாட்ஸ்–அப்’பில் மிரட்டல் விடுத்த ரவுடி மீது வழக்குப்பதிவு
மதுரை மத்திய சிறை பெண் சூப்பிரண்டுக்கு ‘வாட்ஸ்–அப்‘பில் மிரட்டல் விடுத்த ரவுடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தேடும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை,
மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளா. இவரை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த ரவுடி ‘புல்லட்‘ நாகராஜ் பகிரங்கமாக மிரட்டி பேசியிருக்கும் ‘வாட்ஸ்–அப்‘ ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
புல்லட் நாகராஜின் அண்ணன், ஒரு கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்தார். அவரை பரிசோதனை செய்ய வந்த பெண் டாக்டருடன் தகராறு செய்தது தொடர்பாக ‘புல்லட்‘ நாகராஜனின் அண்ணன் மீது சூப்பிரண்டு ஊர்மிளா நடவடிக்கை எடுத்துள்ளார். இதை அறிந்து ஆத்திரம் அடைந்த ‘புல்லட்‘ நாகராஜ் அந்த மிரட்டல் ஆடியோவை வெளியிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மத்திய சிறை ஜெயிலர் ஜெயராமன், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதை தொடர்ந்து, கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டரை விசாரணை நடத்துமாறு கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் ‘புல்லட்‘ நாகராஜ் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க கரிமேடு இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ‘புல்லட்‘ நாகராஜனை தேடும் பணி தீவிரமாக நடப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.