பாம்பன் ரோடு பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு


பாம்பன் ரோடு பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sept 2018 4:15 AM IST (Updated: 9 Sept 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரோடு பாலத்தின் தூண் சேதமடைந்துள்ளது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளி வந்ததை தொடர்ந்து, பாலத்தை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைப்பதில் பெரும் பங்கு வகிப்பது அன்னை இந்திரா காந்தி ரோடு பாலம். கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைந்த இந்த பாலத்தில் 79 தூண்கள் உள்ளன. இந்தநிலையில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு தூணில் 2 இடங்களில் கீறல் ஏற்பட்டு கற்கள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. இதுகுறித்து கடந்த 7–ந்தேதி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஓய்வூ பெற்ற சீனியர் என்ஜினீயர் தங்கமணி, உதவி கோட்ட பொறியாளர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் பாம்பன் ரோடு பாலத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சுரங்கப்பாதை வழியாக இறங்கி பாலத்தின் உட்பகுதி, மற்றும் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், உடனடியாக பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

பாம்பன் ரோடு பாலத்தில் இருபுறமும் உள்ள விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தற்போது இதில் பெரும்பாலான விளக்குகள் எரியாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே அங்கொன்று இங்கொன்றுமாக விளக்குகள் எரிகின்றன. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தில் உள்ள அனைத்து விளக்குகளையும் எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story