காஞ்சீபுரத்தில் பசு மாடுகளை திருடிய 6 பேர் கைது


காஞ்சீபுரத்தில் பசு மாடுகளை திருடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2018 10:15 PM GMT (Updated: 8 Sep 2018 6:54 PM GMT)

காஞ்சீபுரத்தில் பசு மாடுகளை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டு பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில், பசுமாடுகள் திருடப்படுவதாக காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்போலீஸ் படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் துளசி, முரளி மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் பசு மாடுகளை திருடிய கும்பலை பிடிக்க வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியனுக்கு,காஞ்சீபுரம் அருகே வெள்ளைகேட் என்ற இடத்தில் பசு மாடுகள் திருடிய கும்பல் காரில் வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். காரில் இருந்த 6 பேரை பிடித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்த ஆள்வான் (வயது 30), காஞ்சீபுரம் வெள்ளைகேட் பகுதியை சேர்ந்த இன்பா என்கிற இன்பசேகரன் (25), மதன் (25), ஆனந்தன் (22), ஆந்திராவில் வக்கீலுக்கு படித்து வரும் விமல்ராஜ் (30), காஞ்சீபுரம் ஓரிக்கையை சேர்ந்த விமல்ராஜ் (28), என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் காஞ்சீபுரத்தில் தேடிய 25 பசுமாடுகளை இந்த கும்பல் ஒரு தரகரின் மூலம் தெலுங்கானா மாநிலத்திற்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து பசு மாடுகளை திருடியதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் இன்பா, ஆள்வான், விமல்ராஜ், மதன் ஆகியோர் பசுமாடுகளை திருடியது மட்டுமல்லாமல் காஞ்சீபுரம் பகுதிகளில் வாடகைக்கு கார்களை எடுத்துச்சென்று அதை விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story