15 பவுன் நகை, ரூ.1 லட்சத்துடன் மாயமான போலி சாமியார் கைது


15 பவுன் நகை, ரூ.1 லட்சத்துடன் மாயமான போலி சாமியார் கைது
x
தினத்தந்தி 9 Sept 2018 4:45 AM IST (Updated: 9 Sept 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருமண தோஷம் கழிப்பதாக கூறி 15 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்துடன் மாயமான போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியை சேர்ந்தவர் வசந்தா (வயது 55). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகளுக்கு திருமண தோஷம் கழிப்பதற்காக, மேல்மலையனூர் கோவிலுக்கு மகளுடன் சென்றார்.

அங்கு கோவில் வெளியே சாமியார் வேடத்தில் இருந்த பாபு(22) என்பவர் பூஜை, பரிகாரம் செய்தால் தங்கள் மகளுக்கு தோஷம் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என வசந்தாவிடம் ஆசைவார்த்தைகளை கூறினார்.

அதனை உண்மை என்று நம்பிய வசந்தா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாமியார் பாபுவை தனது வீட்டுக்கு வரவழைத்தார். அதன்படி அங்குவந்த பாபு பூஜை, பரிகாரம் என பல வித்தைகளை காட்டிய பிறகு கடைசியாக, “தங்க நகைகள் மற்றும் பணம் கொடுங்கள். அதனை மேல்மலையனூர் கொண்டுசென்று அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொண்டு வந்து தருகிறேன். அப்படி செய்தால் திருமண தோஷம் நீங்கும்” என்றார்.

இதையடுத்து வசந்தா, தனது மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்து இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை அவரிடம் கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்ட பாபு, அதன்பிறகு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா, சாமியாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகுதான் நகை, பணத்துடன் சாமியார் பாபு மாயமாகி விட்டதும், தான் ஏமாற்றப்பட்டதும் வசந்தாவுக்கு தெரியவந்தது.

இது குறித்து வசந்தா அளித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் அலமேலு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த பாபுவை தேடிவந்தனர்.

இந்தநிலையில் மேல்மலையனூரில் பதுங்கி இருந்த பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பாபு, போலி சாமியார் என்பதும், இதேபோல் தோஷம் கழிப்பதாக கூறி பலரிடம் நகை, பணம் மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 11 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் கைதான பாபுவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story