போடி அருகே கொழுக்குமலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள் பார்க்கும் இடமெல்லாம் பரவசக் காட்சிகள்
போடி அருகே உள்ள கொழுக்குமலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பார்க்கும் இடம் எல்லாம் பரவசம் ஏற்படுத்தும் வகையில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.
தேனி,
தேனி மாவட்டம், போடி அருகே மேற்குதொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக கொழுக்குமலை அமைந்துள்ளது. தமிழக–கேரள மாநில எல்லையில் இந்த எழில்மிகுந்த இடம் உள்ளது. இங்கு ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளது என்று சொல்வதை விட, பார்க்கும் இடங்களை எல்லாம் ரசிக்கலாம்.
தலைதூக்கி மேக கூட்டங்களை பார்த்து ரசிப்பது அழகு. அதே மேகக்கூட்டங்கள் மலைகளை தழுவிக் கொண்டு ஓய்வு எடுக்க, அதனை மற்றொரு உயரமான மலையின் மேல் இருந்து ரசித்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையை நேரில் காட்சியாக கொடுக்கும் இடம் தான் இது. இப்பகுதியில் மேகக்கூட்டங்கள் தரையிறங்கி இருக்கும் காட்சியானது பனிப்பாறை போன்ற தோற்றத்தில் கடல் உறைந்து கிடப்பதை போன்று இருக்கும். இந்த காட்சிகளை காலை நேரங்களில் சூரியன் உதிக்கும் வேளையில் பார்த்து ரசிக்கலாம்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,100 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இங்கு விளையும் தேயிலை தான் உலகில் உயரமான இடத்தில் விளையும் தேயிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்குள்ள மீசைப்புலி மலையும் சிறந்த சுற்றுலா இடமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,661 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது.
இங்கு குறிஞ்சி மலர்ச் செடிகள் அதிக அளவில் உள்ளன. இவை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மலையில் இருந்து பார்க்கும் திசை எங்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பார்க்கும் போதே பரவசம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
கடந்த மார்ச் மாதம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்து எதிரொலியாக இந்த பகுதியில் மலையேற்றம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு முன்பும் இந்த மலையில் மலையேற்றம் செய்வதற்கு முறையான அனுமதி கிடையாது. இருப்பினும், தினமும் சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்று வந்தனர். குரங்கணி தீ விபத்துக்கு பிறகு குரங்கணியில் இருந்து யாரும் மலையேற்றம் செல்லாமல் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள சூரியநல்லி வழியாக ஜீப்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மலர்களை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.