ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி எலும்புக்கூடாக மீட்பு


ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி எலும்புக்கூடாக மீட்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 11:45 PM GMT (Updated: 8 Sep 2018 10:36 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கீழமஞ்சிநாயக்கபட்டியை சேர்ந்தவர் மொக்கை. இவருடைய மனைவி ஜெயக்கொடி (வயது 62). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயக்கொடி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற ஜெயக்கொடி பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவருடைய மகன்களும், உறவினர்களும் பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் காரைப்பாறை என்ற இடத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதை, மலையில் கிழங்கு எடுக்க சென்ற பழங்குடியின மக்கள் பார்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ராஜதானி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசாரும், வனச்சரகர் குமரேசன் தலைமையில் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் எலும்புக்கூடு கிடந்த இடத்துக்கு சென்றனர். அவர்களுடன் ஜெயக்கொடியின் மகன்களும் சென்றனர்.

பின்னர் அங்கு கிடந்த மனித மண்டை ஓடு, முதுகெலும்பு, கை, கால் எலும்புகளை போலீசார் சேகரித்தனர். மேலும் அதன் அருகே கிடந்த செருப்பு, நீல நிற பூப்போட்ட சேலை ஆகியவற்றையும் கைப்பற்றினர். அவை காணாமல் போன ஜெயக்கொடியாக இருக்கலாம் என கருதிய போலீசார் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையொட்டி அவர்களது மகன்கள் அங்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த சேலை, செருப்பு வைத்து அது தனது தாயார் தான் என்று கூறினர்.

இதையடுத்து எலும்புகள், போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு மூதாட்டி ஜெயக்கொடிதான் என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜெயக்கொடி எதற்காக மலைப்பகுதிக்கு சென்றார், வனவிலங்குகள் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று பல கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story