கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் தி்ட்டம் பலிக்காது ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் பேட்டி
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் திட்டம் பலிக்காது என்றும், 5 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக குமாரசாமி இருப்பார் என்றும் ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். விவசாய கடன்களை முதல்-மந்திரி தள்ளுபடி செய்துள்ளார். மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறுவது பா.ஜனதாவுக்கு பிடிக்கவில்லை. கூட்டணி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். அதற்கான ேவலைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதற்காகத்தான் வருமான வரித்துறை மூலமாக மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கடி கொடுக்க மத்திய அரசு நினைக்கிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். அவர்களது திட்டம் பலிக்காது. கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். 5 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக குமாரசாமியே இருப்பார்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு அளிக்கிறது.முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதுபற்றியும், சித்தராமையா பற்றியும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.
Related Tags :
Next Story