ஆசிரியைகள் மாநாடு தொடங்கியது: கன்னியாகுமரி பேரணியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு


ஆசிரியைகள் மாநாடு தொடங்கியது: கன்னியாகுமரி பேரணியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 11:04 PM GMT (Updated: 8 Sep 2018 11:04 PM GMT)

கன்னியாகுமரியில் அகில இந்திய ஆசிரியைகள் மாநாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த பேரணியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி,

அகில இந்திய ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் முதல் மாநாடு கன்னியாகுமரியில் நேற்று காலை தொடங்கியது. மாநாட்டுக்கு அகில இந்திய ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்யுக்தா தலைமை தாங்கினார். வரவேற்பு குழு செயலாளர் பேராசிரியை லேகா வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர் வாசுகி சிறப்புரையாற்றினார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் அபிஜித் முகர்ஜி, பொதுச்செயலாளர் சி.என்.பாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த மாநாட்டில் 250 பிரதிநிதிகள் இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.

மாலை 4 மணிக்கு பேரணி நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பின்னர் 5 மணிக்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை வரவேற்று பேசினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் மரியதாவ்லே, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் ராஜேந்திரன், துணை பொதுச்செயலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியைகளின் தலைமை பண்பு வளர்த்தல் பற்றி இந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் தபஸ்வி பேசுகிறார்.

மாநாட்டையொட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் விவகாரம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்று உள்ளது. எனவே எதிர்காலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆசிரியைகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவம் நிலை நாட்ட வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு 2 வருடங்கள் வழங்குவது போல் மாநில அரசும் வழங்க வேண்டும். மேலும் இந்த அமைப்பு பெண்களுக்கான உரிமைகளை பெற்று தரும் வேலைகளில் முழுமையாக ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழ்நாடு ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கில்டாராணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ் மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் மயில் செய்து இருந்தார்.

Next Story