உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 9 Sep 2018 6:54 AM GMT (Updated: 9 Sep 2018 6:54 AM GMT)

அவள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். சுறுசுறுப்பும், திறமையும், அழகான தோற்றமும் கொண்டவள். நடன ஆர்வம் அவளிடம் இயற்கையாகவே இருந்ததால், அவளை சிறுவயதிலேயே தாயார் மேற்கத்திய நாட்டிய பயிற்சி வகுப்பில் கொண்டு போய் சேர்த்தார்.

வள் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். சுறுசுறுப்பும், திறமையும், அழகான தோற்றமும் கொண்டவள். நடன ஆர்வம் அவளிடம் இயற்கையாகவே இருந்ததால், அவளை சிறுவயதிலேயே தாயார் மேற்கத்திய நாட்டிய பயிற்சி வகுப்பில் கொண்டு போய் சேர்த்தார். அவள் நடனத்தில் முழுத்திறமையையும் காட்டி ஜொலித்தாள். வெளிநிகழ்ச்சிகளுக்கு சென்று பரிசுகளும் பெற்றாள். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தாள். நடனத் திறமையால் அங்கும் பிரபலமாகிவிட்டாள்.

அவளுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர், அவளைப் போன்று சுறுசுறுப்பும், திறமையும் கொண்டவரில்லை. மற்றவர்களோடு பழக விரும்பாத தனிமை விரும்பி. எந்த நேரமும் தனது அம்மாவுடனே பொழுதை கழிப்பார். சுயமாக முன்னேறும் அளவுக்கு திறமையில்லாதவராக இருந்ததால், தந்தை நடத்திவந்த சிறிய தொழில் நிறுவனம் ஒன்றில் அவருக்கு உதவியாக இருந்துவந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் திடீரென்று நடனநங்கையின் தாயார் மரண மடைந்துவிட்டார். அவரது இழப்பு மகனை பெரிதும் பாதித்தது. அதில் இருந்து அவரை மீட்டெடுக்க சகோதரியும், தந்தையும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அப்போது உறவினர்களில் ஒருவர், ‘அவன் தாய்ப்பாசத்திற்கு ஏங்குகிறான். தாய் போன்று அவனை பராமரித்து பாசம்காட்ட மனைவி கிடைத்தால் அவன் சரியாகிவிடுவான். அதனால் அவனுக்கு தகுந்த பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவையுங்கள்’ என்றார்.

அதன்படி அவருக்கு பெண் தேடினார்கள். அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு, அதிக வசதியான இடத்தில் இருந்து பெண் கொடுக்க முன்வந்தார்கள். பெண் படித்தவள். அழகானவள். அந்த பெண்ணுக்கு ஒரு அண்ணனும் இருந்தான்.

‘குறிப்பிடும்படி திறமை எதுவும் இல்லாத தனது அண்ணனுக்கு இ்வ்வளவு அழகான பெண்ணை ஏன் திருமணம் செய்துவைக்கிறார்கள்?’ என்ற சந்தேகம் நடன நங்கைக்கு ஏற்பட, நேரடியாகவே தனது வருங்கால அண்ணியிடம் சென்று, ‘என் அண்ணனை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு முழுசம்மதம்தானே..’ என்று கேட்டாள். அதற்கு அவள் புன்னகையோடு ஆமாம் என்று பதிலளித்தாள். ஆனால் அவள் திருமணத்திற்கு பின்பு அரங்கேற்ற மிகப் பெரிய சதி திட்டம் ஒன்றை வகுத்து வைத்திருந்ததை நடன நங்கை அறிந்திருக்கவில்லை.

அவர்கள் திருமணம் பிரமாண்டமாய் நடந்து முடிந்தது. தனது நாத்தனாரான நடன நங்கையிடம் புதுப்பெண், தோழி போன்று நடந்துகொண்டாள். இருவரும் நேரங்கிடைக்கும் போதெல்லாம் கல்லூரி காலத்தை பற்றியும், அப்போது துளிர்்த்த காதல்கள் பற்றியும் சிரிக்க சிரிக்க பேசினார்கள். நடன நங்கைக்கு கல்லூரிக் காலத்தில் கசப்பான காதல் ேதால்வி ஒன்று உண்டு. அதை பற்றி அப்போது அவள் தன்னை மறந்து சொல்லிவிட்டாள். அதை உள்வாங்கிக்கொண்ட புதுப்பெண், அவளை பற்றிய எதிர்மறையான விஷயங்களை எல்லாம் குடும்பத்தில் உள்ள நபர்கள் மூலமாகவே தோண்டித்துருவி தெரிந்துகொண்டே இருந்தாள். அதில் பிரச்சினைக்குரிய ஒருசில விஷயங்களும் இருந்தன.

திருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில், அண்ணியான அவள் முதல் முறையாக தனது சகோதரனை வீட்டிற்கு அழைத்துவந்தாள். அவனை நடன நாத்தனாருக்கு அறிமுகம் செய்துவைக்க, அவளுக்கு அதிர்ச்சி. அவன் இயல்புக்கு மாறான தோற்றமும், பார்வையும் கொண்டவனாக இருந்தான்.

‘இவ்வளவு நாட்களாக இவரை நீங்கள் ஏன் வீட்டிற்கு அழைத்துவரவில்லை?’ என்று நடன நாத்தனார் கேட்க, ‘இப்போதுதான் அதற்கான நேரம் கனிந்திருக்கிறது’ என்ற அவள், தனது சதிதிட்டத்தை அப் போதுதான் வெளிப்படுத்தினாள்.

‘பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் என் சகோதரன் பெயருக்கு இருக்கிறது. அவன் பார்க்க சற்று ஒருமாதிரியாக இருந்தாலும் ரொம்ப அதிர்ஷ்டமானவன். அவனை நீ திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். சம்மதிக்காவிட்டால் நீ மட்டுமல்ல, உன் அண்ணனும், உங்கள் குடும்பமும் அவமானப்படவேண்டியதிருக்கும்’ என்று எச்சரிக்கை கொடுத்தவள், அந்த அவமானம் எப்படி நேரும் என்பதையும் விளக்கியிருக்கிறாள்.

‘உன் அண்ணன் சராசரியான ஆணில்லை. அவரால் எனக்கு முழுமையான படுக்கை அறை மகிழ்ச்சி கிடைக்கவில்லை. உன் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் அனைத்தும் எனக்கும் தெரியும். நீ என் சகோதரனை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், உன் அண்ணனிடம் இருக்கும் பலகீனத்தை வெளிப்படையாகக்கூறி விவாகரத்து செய்துவிடுவேன். உன்னையும் யாரும் திருமணம் செய்ய முடியாத அளவுக்கு எதை வேண்டுமானாலும் செய்வேன். இதெல்லாம் நடக்கக்கூடாது என்றால், நீ என் சகோதரனை திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதற்காகத்தான் நான் திட்டமிட்டு உன் அண்ணனை திருமணம் செய்துகொண்டேன்’ என்று மிரட்டல்தொனியில் பேசியிருக்கிறாள்.

தனது சகோதரன் திருமணத்திற்காக எவ்வளவு மட்டமாகவும் இறங்கத் தயாராக இருக்கும் அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாள், அந்த நடன நங்கை.

- உஷாரு வரும்.

Next Story