காட்டாற்று பரிசலில் திகிலான வாழ்க்கைப் பயணம்


காட்டாற்று பரிசலில் திகிலான வாழ்க்கைப் பயணம்
x
தினத்தந்தி 9 Sept 2018 1:02 PM IST (Updated: 9 Sept 2018 1:02 PM IST)
t-max-icont-min-icon

மழை இடைவிடாமல் கொட்டி நிலச்சரிவை உருவாக்கி சமீபத்தில் கேரளாவையே புரட்டிப்போட்டு சின்னாபின்னப்படுத்திய நேரம். நீலகிரி மலைப்பகுதி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைந்து கடந்து, கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது மாயாறு என்ற ஜீவநதி.

ழை இடைவிடாமல் கொட்டி நிலச்சரிவை உருவாக்கி சமீபத்தில் கேரளாவையே புரட்டிப்போட்டு சின்னாபின்னப்படுத்திய நேரம். நீலகிரி மலைப்பகுதி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைந்து கடந்து, கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது மாயாறு என்ற ஜீவநதி. கட்டுக்கடங்காமல் பாய்ந்த அந்த வெள்ளம், அதன் கரையில் இருக்கும் தெங்குமரகடா என்ற மலைக்கிராமத்தை சேர்ந்த அழகுப் பெண்ணான ராசாத்தியின் வாழ்க்கையில் திடீர் திகிலை உருவாக்கிவிட்டது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த அவரால் குறிப்பிட்ட நாளில் மாயாற்றை கடந்து மணமகனை கரம் பற்ற செல்ல முடியவில்லை. ஆனாலும் அவர் கலங்கவில்லை. இக் கரையில் இருந்து அக்கரைக்கு அச்சமின்றி பரிசலில் பயணம் செய்து, ஊடகங்கள் அனைத்திலும் செய்தியாகிவிட்டார். காட்டாற்று வெள்ளத்திற்குள் அவரது பரிசல் தடுமாறி, தவழ்ந்து, அலைபாய்ந்து சென்றதை ஊடகங்களில் காட்சியாக பார்த்தவர்கள் மனதெல்லாம் திக்.. திக்..! ‘இ்ந்த பொண்ணுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்கணும். நீடுழி வாழணும்..’ என்று நெகிழ்ந்து சில நிமிடங்கள் பிரார்த்தித்தார்கள்.

மழை எல்லாம் ஓய்ந்துவிட்டது. எங்கும் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. மாயாற்றில்கூட தண்ணீர் மட்டுப்பட்டுவிட்டது. அந்த ராசாத்தியின் பரிசல் பயணம் மட்டும் நம் மனதைவிட்டு அகலவில்லை. அன்று அந்த பரிசல் நல்லபடியாக கரை சேர்ந்ததா? நடு ஆற்றுக்குள் பரிசல் தத்தளித்து சென்றபோது அவர் மனநிலை எப்படி இருந்தது? கணவரது கரம் பற்றிய அவரது புது வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளோடு புறப்பட்டோம் தெங்குமர கடாவை ேநாக்கி..! அது ஒரு அசுரத்தனமான அனுபவம்..!

ஈரோடு மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியான சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் செல்லும் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் தெங்குமரகடா சாலை தொடங்குகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பவானிசாகர் அணை தென்படுகிறது. அங்கிருந்து வனத்துறையால் பாதுகாக்கப்படும் காட்டுப்பகுதி தொடங்கிவிடுவதால், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். இந்த வனத்தில் குண்டும் குழியுமான மலைச் சாலையில் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தெங்கு மரகடாவை எட்டிப்பிடிக்க வேண்டியதிருக்கிறது. வழியில் மான்கள், மயில்கள், முயல்களை அவ்வப்போது பார்க்க முடிகிறது. யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை ேபான்றவைகளை எப்போதாவது பார்க்கலாம். இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு அந்த (மாய) மாயாறு நம்மை வரவேற்கிறது.

நீலகிரி மலையின் அடர்ந்த வனப்பகுதிகளில் ஓடி வரும் இ்ந்த ஜீவநதி, தெங்குமரகடா கிராமத்தை தொட்டுச்செல்கிறது. ஈரோடு மாவட்டத்தையும், நீலகிரி மாவட்டத்தையும் மாயாற்றை எல்லையாக வைத்து பிரித்து இருப்பதால் தெங்குமரகடா கிராமம் நீலகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இது மலைகளால் சூழப்பட்ட அழகிய கிராமம். விவசாயம் முக்கிய தொழில். ஒருபுறம் கொடநாடு மலையும் மறுபுறம் அல்லிராணி கோட்டை மலையும் அழகுற காட்சி தருகிறது.

இந்த கிராமத்தில் தனியார் யாருக்கும் நிலம் சொந்தமில்லை. வீடுகளும் சொந்தமில்லை. அரசு கட்டிக்கொடுத்த பழமையான சிறு வீடுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். ஓட்டல், டீக்கடைகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் மாயாற்றை கடந்துதான் ஆகவேண்டும். சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், சத்தியமங்கலம் வனக்கோட்டம் என்று பல அடுக்கு பாதுகாப்பு பிரதேசத்தில் தனித்தீவு போலவே தெங்குமரகடா கிராமம் இருக்கிறது. மாயாற்றை கடந்து செல்ல பரிசல் மட்டுமே துணை. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தண்ணீரின் அளவு குறைந்தால் லாரி, வேன், ஜீப் போன்ற வாகனங்கள் ஆற்றைக்கடந்து கிராமத்துக்குள் நுழையும். தண்ணீர் இருந்தால் பரிசல் பயணம்தான்.

இந்த தீவு கிராமத்திற்கு புலம்பெயர்ந்து வாழ வந்த அவிநாசி-செல்வி தம்பதியரின் மகள்தான் ராசாத்தி. தெங்குமரகடாவில் 8-ம் வகுப்புவரை படித்த ராசாத்தி, பின்பு கோவை மாவட்டம் சீலியூரில் உள்ள பள்ளிக்கு படிக்க வந்தார். கபடி விளையாட்டில் சிறந்து விளங்கினார். மாநில அளவிலான போட்டிகளில் பள்ளிக்கூடத்துக்காக விளையாடியிருக்கிறார். அந்த ஆர்வத்தால் பிளஸ்-2 முடித்துவிட்டு, விளையாட்டு கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். தொடர்ந்து முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

பின்பு ராசாத்திக்கு பெற்றோர் வரன் தேடியிருக்கிறார்கள். கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தொட்டபாவி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சி.ரஞ்சித்குமாரை (வயது 27) பேசி முடித்திருக்கிறார்கள். பின்பு சடங்கு, சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாக நடந்திருக்கின்றன. முகூர்த்தத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலையில்தான் காட்டாற்று வெள்ளம் குறுக்கிட்டிருக்கிறது. இவர் விளையாட்டு வீராங்கனை என்பதால் தைரியமாக அதை பரிசலில் கடந்திருக்கிறார். நல்லபடியாக திருமணமும் நடந்து, அவர்கள் மணவாழ்க்கையை தொடங்கியிருக்கிறார்கள்.

தெங்குமரகடாவில் மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற 23 வயது ராசாத்தி, கணவர் அருகில் அமர்ந்தபடி அந்த திக்.. திக்.. பரிசல் பயணம் பற்றி நம்மோடு பேசுகிறார்:

“எங்கள் சமூகத்தில் திருமண பேச்சுவார்த்தையை உறுதி செய்ய வீடு வாசல் பார்க்கிறது என்று ஒரு சடங்கு உண்டு. அதற்காக மணமகன் வீட்டில் இருந்து 80 பேர் வந்தார்கள். காட்டை கடந்து வந்த அவர்கள் மாயாற்றை பார்த்ததும் பயந்து போனார்கள். முதலைகள் கிடக்கும் என்பதை அறிந்து அக்கரை யிலே வேனை நிறுத்திவிட்டார்கள். பரிசல் பயணத்திற்கு தயங்கி, ‘இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பெண்ணை திருமணம் செய்துதான் ஆகவேண்டுமா?’ என்று முணுமுணுத்திருக்கிறார்கள். இவரிடம் ‘உனக்கு வேற ஊரில் பெண் கிடைக்கவில்லையா?’ என்றும் கேட்டிருக்கிறார்கள். காட்டாற்று வெள்ளம் அவர்களை அப்படி கேட்கவைத்திருக்கிறது. பின்பு பரிசல் ஏறி, ஆற்றைக் கடந்து வந்தார்கள். அந்த முதல் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்தது.

அடுத்து ஆலம்கொம்பில் திருமணம். பெண்வீட்டாராகிய நாங்கள்தான் ஆற்றைக் கடந்து அங்கு செல்லவேண்டும். திருமண ஏற்பாடுகள் நடந்தன. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பிதழ்கள் கொடுத்ேதாம். திருமணத்திற்கு முந்தைய நாள் உப்பு மாற்றுதல், வளையல் போடுதல் போன்ற சடங்குகள் நடக்க இருந்ததால் முதல் நாளே ஆலம்கொம்பு செல்ல தீர்மானித்ேதாம். அப்போது எங்கள் ஊரில் சொட்டு மழைகூட இல்லை. ஆனால் நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்த மழையாலும், கேரளாவில் திறந்துவிடப்பட்ட அணைகளாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பரிசல்விட முடியாத நிலை ஏற்பட்டது. ஒட்டுமொத்த மக்களும் கிராமத்துக்குள் முடங்கினார்கள். தண்ணீர் குறைந்துவிடும் என்று நாங்கள் காத்திருக்க, நிமிடத்திற்கு நிமிடம் தண்ணீர் அதிகரித்து எங்களுக்கு பயத்தை உருவாக்கியது. இந்த தகவலை மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்ல அவர்களும் கலங்கிப்போனார்கள். அனைத்து ஏற் பாடுகளும் முடிந்த பிறகு திருமணத்தையும் தள்ளிப் போட முடியாது.

எனக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும், ‘எப்படியாவது வந்து சேர்ந்துவிடுவோம்’ என்று இவருக்கு போனில் தகவல் சொன்னேன். முதல் நாள் சடங்குகளை முடித்துவிட்டு திரும்பி வந்துவிட்டு, மறுநாள் முகூர்த்தத்திற்கு செல்வதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால் தண்ணீர் அளவு மளமளவென உயர்ந்ததால் எப்படியாவது ஆற்றைக் கடந்து போய், அங்கேயே தங்கியிருந்து சடங்கையும், முகூர்த்தத்தையும் முடித்துவிட்டுதான் திரும்ப வேண்டும் என்று தீர்மானித்தோம். அதற்குள் நாங்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவிப்பது வனத்துறை அதிகாரி களுக்கும், கிராமத்து தலைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள், எப்படியாவது என்னை திருமணத்துக்கு அனுப்பி வைத்து விடுவது என்று முடிவு செய்தார்கள்.

வழக்கமாக ஊரில் உள்ள அனை வருமே டெம்போ வாடகைக்கு எடுத்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவோம். ஆனால், என் திருமணத்தில் காட்டு வெள்ளத்திற்கு பயந்து எல்லோரும் பின்வாங்கிவிட்டார்கள். முக்கிய உறவினர்கள் 15 பேர் மட்டுமே என்னோடு பரிசலில் வர தயாரானார்கள். அவர்களோடு ஆற்றங்கரைக்கு போனால் மயக்கம் வருவதுபோல் இருந்தது. ஆற்றில் பெரிய பெரிய காட்டு மரங்கள் உருண்டு புரண்டு வந்துகொண்டிருந்தன. வழக்கத்தைவிட 15 அடி உயரத்துக்கு தண்ணீர் எழும்பி சென்றது. ஒரு சுழியில் சிக்கினாலும் பரிசல் கவிழ்ந்து விடும். அந்த காட்டாறு 50 அடி அகலத்திற்கு பரந்து விரிந்து பாய்ந்தது. ஆழமும் 40 அடிக்கு மேல் இருக்கும். என் வாழ்நாளில் அவ்வளவு தண்ணீரை பார்த்ததில்லை. நீரின் வேகத்தை பார்த்து கண்ணீர்விட்டேன்.

அப்போது கிராமத்தினர்தான், இது நம்ம ஆறு... நமக்கு கெடுதல் எதுவும் செய்யாது என்று ஆறுதல் கூறினார்கள். பரிசல் ஓட்டும் சின்னராசு அண்ணன், ‘நான் இருக்கேன் உன்னை பத்திரமாக கொண்டு கரை சேர்ப்பேன்’ என்று தைரிய மூட்டினார். அந்த பரிசலை அவர் மட்டும்தான் ஓட்டுவார். அன்று தற்காப்புக்காக அவர் தனது மாமாவையும் துணைக்கு பரிசலில் ஏற்றிக்கொண்டார்.

நாங்கள் நான்கு பேர் பரிசலில் திகிேலாடு ஏறினோம். தண்ணீர் கடுமையாக இழுத்தது. கம்பால் குத்தி பரிசலை கட்டுப் படுத்த முடியாது என்பது தெரியும். துடுப்பு போடவேண்டும். தங்கள் உயிரை பணயம்வைத்து சின்னராசுவும் அவருடைய மாமனாரும் துடுப்பு போட்டார்கள். நான் கண்ணீருடன் கண்களை மூடிக்கொண்டேன். எனக்காகத்தானே இத்தனை கஷ்டங்கள், ஒரு பாலம் மட்டும் இருந்திருந்தால் இப்படி கண்ணீர்விட வேண்டியதில்லையே என்று நினைத்து வருந்தினேன். எப்படியோ சுழியில் சிக்காமல் அக்கரை போய் சேர்ந்தேன். எனக்கு நீச்சல் தெரியும் என்றாலும் ஒவ்வொரு வினாடியும் எனக்கு திக்.. திக்..தான். கண்களை மூடி எங்கள் மாகாளி அம்மனை வேண்டிக்கொண்டிருந்தேன். 15 பேரும் அவ்வாறு கரை சேர்ந்தோம். வழக்கமாக குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பிவிடும் அரசு பஸ், எங்கள் வருகைக்காக அன்று காத்திருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டபடி, பஸ்சில் பயணித்து ஆலம்கொம்பு சென்றடைந்தோம்” என்று ஆனந்த கண்ணீர் வழிய சொல்கிறார், ராசாத்தி. இவரது அண்ணன் சிவசக்தி போலீஸ் துறையில் பணியாற்றுகிறார்.

முதல் நாள் சடங்கு முடிந்ததும் புஜங்கானூரில் உள்ள உறவினர் வீட்டிலேயே தங்கியிருந்து, மறுநாள் முகூர்த்தத்திற்கு கிளம்பிச் சென்றிருக்கிறார். திருமணம் முடிந்த பின்பும் மாயாற்றில் தண்ணீர் குறையாததால், கணவர் வீட்டில் இருந்துவிட்டார். ஒரு வாரம் கழித்தே தெங்குமரகடாவுக்கு வந்திருக்கிறார்கள் புதுமணத் தம்பதிகள். அவர்களை அதே மாயாறும், அந்த பகுதி மக்களும் திரண்டு நின்று வரவேற்றிருக்கிறார்கள். ராசாத்தியின் வாழ்க்கையில் இந்த காட்டாறு மட்டுமல்ல சில நேரங்களில் யானைகளும், குட்டிகளோடு சிறுத்தைகளும் குறுக்கிட்டிருக்கத்தான் செய்கின்றன. அவைகள் எல்லாம் இவருக்குள் பயத்தை அல்ல, தைரியத்தை உருவாக்கியிருக்கின்றன. பரிசல் பயணம் இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்களையும் குவித்திருக்கிறது.

(தெங்குமரகடா கிராமம் இயற்கை அழகின் அற்புதமாக திகழ்கிறது. ஆனால் மாயாறுக்கு பயந்து அங்குள்ளவர் களுக்கு திருமணம் செய்துகொடுக்க வெளியூர் மக்கள் பயப் படுகிறார்கள். முதலில் சம்பந்தம் செய்துகொள்ள தயாராகும் வெளியூர்காரர்கள், மாயாற்றை பார்த்ததும் மனம்மாறி திரும்பிப்போய் விடுகிறார்களாம். அதனால் அங்கு திருமணமாகாத இளைஞர்கள் அதிகம் என்று கூறும் ராசாத்தி, ‘ஒரே ஒரு நடை பாலமாவது அமைத்துக்கொடுத்து, தெங்குமரகடா மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிவையுங்கள்’ என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். பரிசல் நாயகியின் ஆசை நிறைவேறினால் நல்லதுதான்!)

Next Story