காணாமல்போன நிலா


காணாமல்போன நிலா
x
தினத்தந்தி 9 Sept 2018 1:35 PM IST (Updated: 9 Sept 2018 1:35 PM IST)
t-max-icont-min-icon

முத்ராவை வீட்டை காலி செய்ய வைக்க அருண் முயற்சிக்கிறான். இந்த நிலையில் பூர்ணிமாவின் செல்போனுக்கு அவர்களது படுக்கை அறை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வருகிறது.

முன்கதை சுருக்கம்:

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின் ஒரு பகுதியில் அருணுடன் போட்டியில் பங்கேற்ற முத்ராவும், மற்றொரு வீட்டில் சுந்தரம் என்பவரும் வாடகைக்கு வசிக்கிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணிமாவுக்கு உதவியாக தாயம்மா கிராமத்தில் இருந்து வருகிறாள். முத்ராவால் அருண் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உருவாகிறது. சுந்தரமும் பாதிப்புக்குள்ளாகிறார்.

முத்ராவை வீட்டை காலி செய்ய வைக்க அருண் முயற்சிக்கிறான். இந்த நிலையில் பூர்ணிமாவின் செல்போனுக்கு அவர்களது படுக்கை அறை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வருகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் முத்ரா இருப்பது தெரியவருகிறது. வீடியோவை அழிக்க வேண்டுமானால் மேலே உள்ள அபார்ட்மெண்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு மிரட்டுகிறாள். தாயம்மா மீது பூந்தொட்டியை தூக்கி போடுகிறாள். அதனால் சுந்தரம் வீட்டை காலி செய்கிறார். வீடியோ விவகாரம் குறித்து அருண் போலீசில் புகார் கொடுக்கிறான். முத்ராவோ தன்னுடன் பழகிய ரோஷன் என்பவன் மூலம் அருண்தான் வீடியோ எடுக்க சொன்னதாக குழப்பம் விளைவிக்கிறாள். அதனால் அருணை போலீஸ் கைது செய்கிறது.வேறு வழியில்லாமல் முத்ராவின் கோரிக்கையை பூர்ணிமா ஏற்று, அருணை வெளியே கொண்டு வருகிறாள். முத்ராவுடன் போட்டியில் பங்கேற்ற கார்த்திக், அருணை சந்தித்து அவளது குடும்ப பின்னணியை கூறுகிறான். அதை கேட்டு அருண் அதிர்ந்துபோகிறான்.

கார்த்திக் நிறுத்தியதும், அருண் முகத்தில் ஒரு சிறு வாட்டம்.

“பதினஞ்சு வயசுலயே முத்ராவை தப்பான வழிக்கு..?” என்று நிறுத்தினான்.

“இல்ல, இல்ல.. அந்த வயசுப் பொண்ணை அநாதரவா தனியா விட்டுட்டுப் போகக்கூடாதுனு கொஞ்சம்கூட யோசிக்காம, அவங்கம்மா ரயிலுக்கு முன்னால குதிச்சு, தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்..”

“ஐயோ..”

“அதுக்கப்புறம் முத்ராவை இந்த உலகம் இப்படியும் அப்படியுமா அலைக்கழிச்சிருக்கு.. பிரச்சினை வந்த ஒவ்வொரு தடவையும், அவளோட அழகுதான் காப்பாத்தியிருக்கு. வாடகை கொடுக்க முடியாம அம்மா உயிரை விட்டதால, சொந்த வீடு வேணும்னு அவளுக்கு ஒரு வெறி..”

“வீடு வெச்சிருக்கற பணக்காரன் யாரும் அவகிட்ட மாட்டலியா..?”

“கல்யாணம் பண்ணிக்கிட்டு, எவனோட அடிமையாவோ செட்டிலாறதுலயோ ஆர்வமில்லனு சொல்வா.. அந்தத் தொலைக்காட்சிப் போட்டில ஜெயிச்சு, ஒரு கிரவுண்டை தனக்குச் சொந்தமாக்கிக்க ஆசைப்பட்டா.. முடியல. ஜெயிச்ச உங்க மேல பார்வை விழுந்து, என்னைக் கழட்டி விட்டா.. உங்க அந்தரங்க ரசனையைத் தெரிஞ்சுக்கதான் படுக்கையறைல அந்த கேமிராவை வெச்சிருக்கா.. ஆனா, நீங்க சுதாரிச்சிட்டீங்க.. மயக்கி வாங்க முடியலைனா, மெரட்டி வாங்கறது எப்படினு யோசிச்சு கணக்குப் போட்டுருக்கா..”

“அவளுடைய பின்னணியைக் கேக்க கஷ்டமாதான் இருக்கு.. அவங்களை யாரோ வீட்டு ஓனர் வெளியே துரத்தினதுக்காக, இப்ப வீட்டு ஓனரா இருக்கற என்னை வெளியே துரத்தணும்னு நினைக்கறது நியாயமா..?” என்று அருண் குமைந்தான்.

“இப்ப என்ன முடிவு பண்ணியிருக்கீங்க, அருண்..?” என்று கேட்டான், கார்த்திக்.

“நாளைக்கு ஒப்பந்தம் எழுத அவங்க வக்கீலைப் பாக்கப் போறோம்.. எனக்காக நேரம் ஒதுக்கினதுக்கு தேங்க்ஸ் கார்த்திக்..”

* * *

முத்ரா சோம்பலாகப் படுக்கையில் புரண்டாள்.

ரோஷன் அவள் பெயரை இழுக்காமல் இருப்பதற்கு அவனுக்குக் கொடுத்த இருபத்தைந்தாயிரம் ரூபாய்தான் சைபர் கிரைமிலிருந்து அவளுடைய லேப்டாப்பை மீட்டிருந்தது. அதில் ஒரு பாடலை ஓடவிட்டு ரசித்துக்கொண்டிருந்தபோது, போன் ஒலித்தது.

எடுத்தாள்.

“ஹலோ..”

“முத்ரா பேய்தான..?” என்றது எதிர்முனை.

“யாரு, தாயம்மாவா..?”

“ஏய், என்னைக் கொல்லப் பார்த்தே இல்ல..? இனிமே நான் யாருன்னு உனக்கு என் முனி காட்டுவாரு..”

“முனியா..? யாரது, உங்க பேரனா..?” என்று வாய்விட்டுச் சிரித்தாள்.

“காத்திருந்து பாரு..!” என்று தாயம்மா எதிர்முனையில் தொடர்பைத் துண்டித்தாள்.

“புல் ஷிட்..!” என்று முத்ரா லேப்டாப்பில் கவனம் பதித்தாள்.

* * *

வக்கீல் மொய்தீன், தூய வெள்ளை உடைகள் உடுத்தியிருந்தார். தாடியும், மீசையும் நரைத்திருந்தன. உச்சி நெற்றியில் தொழுகைத் தழும்பு இருந்தது. விளிம்பில்லா கண்ணாடியை மூக்கில் ஏற்றிவிட்டுக்கொண்டு அருண் கொடுத்த தாள்களைப் படித்தார்.

முத்ரா, ஆவலுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அம்மா முத்ரா, அருண் வங்கியில தன்னோட வீட்டை அடமானம் வெச்சு, கடன் வாங்கி, அதுக்குதான் மாதாந்திர தவணை கட்டிட்டு இருக்காரு.. கடனை மொத்தமா அடைக்கற வரைக்கும் வீட்டை வேற யார் பேர்லயும் மாத்த முடியாது. இப்ப இந்த வீட்டை விக்கணும்னு அவர் முடிவு பண்ணினாக்கூட கடனை மொத்தமா அடைச்சி, அடமானத்துலேர்ந்து வீட்டை மீட்டுதான் விக்க முடியும்..”

“வேற வழி இல்லையா..?” என்றாள் முத்ரா, ஏமாற்றத்துடன்.

“இருக்கு.. மொத்தமா இந்த வீட்டுக் கடனை உன்பேர்ல மாத்த வங்கி ஒத்துக்கிட்டா, முடியும். ஆனா, அதுக்கும் நிறைய விதிமுறைகள் இருக்கு..”

“மொத்த வீட்ல ஒரு போர்ஷனை மட்டும் முத்ரா பேர்ல மாத்த முடியாதுன்னு சொல்றீங்களா..?” என்று அருண் தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் கேட்டான்.

“முடியவே முடியாது..”

“வேற எப்படி சார்..” என்று இழுத்தாள் முத்ரா.

“இன்னொரு விதமா இதை அணுகலாம். ‘நீ இருக்கறவரைக்கும் வாடகை குடுக்க வேண்டாம், வீட்டைக் காலிபண்ணச் சொல்ல மாட்டோம், கடனை முழுசாக் கட்டி முடிச்சபிறகு, அந்தப் போர்ஷனை உன் பேருக்கே மாத்தித் தரோம்’னு முதல்லயே ஒரு ஒப்பந்தம் எழுதி, அருணும், பூர்ணிமாவும் கையெழுத்து போட்டு அதைப் பதிவு பண்ணிடுவோம்..”

“சார், அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு.. இப்ப பூர்ணிமாவை அவங்க பொறந்த வீட்ல கொண்டுவிட்டிருக்கேன். தவிர, ஆடி மாசத்துல பொதுவா நாங்க வீடு விக்கறது, வாங்கறது, பதிவு பண்றது இதைலாம் தவிர்ப்போம்..” என்று இழுத்தான், அருண்.

“இதே பிசினஸ்ல இருக்கற எனக்கு அது நல்லா தெரியும்..” என்றார், மொய்தீன். “ஒப்பந்தத்தைத் தயார் பண்ணிருவோம்.. ஒரு நம்பிக்கை வரதுக்கு நீங்க மட்டும் கையெழுத்து போட்டுருங்க.. ஆடி மாசம் முடிஞ்சதும், பூர்ணிமாகிட்ட கையெழுத்து வாங்கி, சார்பதிவாளர் அலுவலகத்துல பதிவு பண்ணிடுவோம்..” என்றவர், முத்ரா பக்கம் திரும்பினார். “உனக்கு சம்மதம்தான..?”

“வேற வழியில்லையே.. சம்மதம்..!” என்றாள் முத்ரா, முழு மனதில்லாமல்.

வக்கீல் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்ததும், முத்ரா தன் வசீகரமான புன்னகையை விரித்தாள்.

“அருண், நானும் வீட்டுக்குதான் வரேன்.. உங்க பைக்ல வரலாமா..?”

“வேண்டாம்..!” என்றான் அருண். “நாம கொஞ்சம் விலகி இருக்கறதே நல்லது..”

“பூர்ணாவும் இல்ல.. தாயம்மாவும் இல்ல.. அவ்ளோ பெரிய வீட்ல நானும் நீங்களும் மட்டும் தனித்தனியா இருக்கணுமா..?” என்று தலையை ஒயிலாக சாய்த்து, கண்ணடித்துக் கேட்டாள்.

“இல்ல.. துணைக்கு ஆள் வருது.. சுந்தரம் காலி பண்ணிட்டுப் போனாரே, அந்த போர்ஷனுக்கு இன்னிக்குக் குடிவராங்க..” என்று சொல்லிவிட்டு, பைக்கை உதைத்தான் அருண்.

* * *

முத்ரா, ஆட்டோ நிறுத்தம் நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சிறுமி குறுக்கிட்டாள். அவளைத் தொடையில் தட்டி, “அக்கா..!” என்று கூப்பிட்டாள்.

முத்ரா திரும்பி, “இந்த வயசுல பிச்சை எடுக்கக்கூடாது. போ..!” என்றாள்.

“பிச்சை கேக்கலக்கா.. இந்த கண்ணாடியில உங்க மூஞ்சியைப் பாருங்களேன்..” என்று கையகலக் கண்ணாடி ஒன்றை அவள் காட்டினாள்.

முத்ரா இயல்பாக அந்தக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்.

“பார்த்துட்டேன். அதுக்கென்ன..?”

“தேங்க்ஸ்க்கா..” என்று சொல்லிவிட்டு, அந்தச் சிறுமி தடதடவென்று ஓடிச்செல்வதைப் பார்த்து முத்ரா, ஆச்சரியப்பட்டாள்.

அந்தச் சிறுமி தெருமுனையில் நின்றிருந்த ஒருவரிடம் அந்தக் கண்ணாடியைக் கொடுத்தாள். கொடுத்துவிட்டு, ஓடிச்சென்றுவிட்டாள். அந்த மனிதர் காவி அணிந்திருந்தார். கழுத்தை மறைத்து வெள்ளை தாடி வளர்ந்திருந்தது. நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்தார். கழுத்தில் குண்டுகுண்டாக ருத்திராட்ச மாலை தொங்கியது. முத்ரா திகைப்புடன் அவரை நோக்கி விரைந்தாள்.

“அய்யா, நில்லுங்க..!” என்றாள்.

நின்றார். திரும்பிப் பார்த்தார்.

“யார் அந்தப் பொண்ணு..? எதுக்கு கண்ணாடியை என் முகத்துக்கு நேரா காட்டிச்சு..? அதைக் கொண்டுவந்து உங்ககிட்ட குடுத்தது..?” என்று கேட்டாள்.

“இதுக்கு நான் பதில் சொல்லக்கூடாதும்மா. முனி பதில் சொல்வாரு..” என்று அகலமாக அவர் புன்னகைத்தார். அவர் மார்பின் குறுக்கே தூளி கட்டியதுபோல் ஒரு காவி மூட்டை. அதில் அந்தக் கையகலக் கண்ணாடி தவிர வேறு என்னென்னவோ கிடந்தன. தாடியை நீவிவிட்டுக்கொண்டு, அவர் நடந்து சென்றார்.

முனியா..? தாயம்மாவும் முனி என்றாள். இவரும் ‘முனி’ என்கிறார். யார் அந்த முனி? முத்ரா சற்றே குழப்பத்துடன் ஆட்டோ நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

* * *

அழைப்பு மணி ஒலி கேட்டு, முத்ரா கதவைத் திறந்தாள். அருண் நின்றுகொண்டிருந்தான்.

“உள்ள வாங்க அருண்..”

“இல்ல, வேண்டாம். நான் உங்க வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு போலீஸ் தடை விதிச்சிருக்கு.. வக்கீல் போன் பண்ணாரு. இந்தப் போர்ஷன் சாவியோட நம்பர் கேக்கறாரு..”

“எதுக்கு..?”

“மாடியில ரெண்டு போர்ஷன் இருக்கு.. எந்த போர்ஷனை உன் பேர்ல எழுதித் தரப்போறோம்னு ஒரு அடையாளத்துக்கு சாவி நம்பரை ஒப்பந்தத்துல எழுதணுமாம்.. புதுப் பூட்டு மாத்தினதும், போலீஸ் உத்தரவுப்படி ரெண்டு சாவியும் உன்கிட்ட குடுத்தாச்சு..”

“நாளைக்கு பூட்டை மறுபடியும் மாத்திட்டா..?”

“கேட்டேனே..! ஒப்பந்தம் போடற தேதில என்ன இருந்ததுனுதான் பார்ப்பாங்களாம்.. சாவியை ஒரு போட்டோ எடுத்து அனுப்பச் சொல்றாரு..”

முத்ராவிடமிருந்து சாவியை வாங்கி, தன் போனில் புகைப்படம் எடுத்தான் அருண்.

“தாயம்மா போன் பண்ணி திடீர்னு முனி, அது, இதுனு மெரட்டறாங்க, அருண்..”

“அது உன் பாடு, அவங்க பாடு..” என்றான், அருண்.

-தொடரும்

Next Story