பாலின சிக்கலும் பாசமுள்ள உறவுகளும்..


பாலின சிக்கலும் பாசமுள்ள உறவுகளும்..
x
தினத்தந்தி 9 Sept 2018 3:04 PM IST (Updated: 9 Sept 2018 3:04 PM IST)
t-max-icont-min-icon

மேக்னா சாகோ, எம்.பி.ஏ. படித்தவர். திருநங்கையான இவர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் பூர்த்தி செய்திருக்கிறார்.

மேக்னா சாகோ, எம்.பி.ஏ. படித்தவர். திருநங்கையான இவர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் பூர்த்தி செய்திருக்கிறார். படிப்பை முடித்ததும் பிரபலமான மருந்து நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார்.

‘திருநங்கையாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்ததால்தான் தன்னால் நன்றாக படித்து வேலையிலும் சேர முடிந்தது’ என்கிறார். பின்பு தான் திருநங்கை என்பதை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, வேலையை இழந்திருக்கிறார். இப்போது தனியார் கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். பட்டப்படிப்பு படித்து தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டும் இந்தியாவின் முதல் திருநங்கை டிரைவர் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.

‘‘பள்ளிப்படிப்பின்போதுதான் உடலளவிலும், மனதளவிலும் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமாளித்துவிட்டேன். ஆனால் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு சங்கடமாக இருந்தது. நான் ஆணாகவே என்னை வெளிக்காட்டிக்கொண்டேன். ஆனாலும் பல்வேறு தொந்தரவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. பாலின சிக்கலால் என் படிப்பு பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்தேன். ஆனாலும் என் பாலினம் குறித்து கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.

பின்பு என் குடும்பத்தினர் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். ஆனால் என்னால் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்தேன். அதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தேன். அதைத்தொடர்ந்து என் குடும்பத்தாரும் என் பாலியல் நிலை குறித்து கேள்வி எழுப்பும் சூழல் ஏற்பட்டது. அதற்கு மேல் என்னால் மவுனம் காக்க முடியவில்லை. உண்மையை ஒப்புக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு சென்றேன்.

அங்கு நான் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தேன். என் நண்பர்கள் உதவினார்கள். சிறுக சிறுக சேமித்து அறுவை சிகிச்சை செய்து பெண் தோற்றம் பெற்றேன். திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு என் வாழ்க்கையில் மாறுதல் ஏற்பட்டது. எங்கள் உரிமைகளை பெற முடிந்தது.

கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தேன். எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் சிக்கல் இருந்தது. போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆதரவாக இருந்தார்கள். அதனால் ஓட்டுனர் உரிமம் பெற முடிந்தது. சொந்தமாக கார் வாங்கினேன். என்னிடம் ஓட்டுனர் உரிமமும் இருந்ததால் தனியார் கார் நிறுவனத்தில் டிரைவராக சேர்த்துக்கொண்டார்கள். இப்போதும் திருநங்கைகள் படித்திருந்தாலும் வேலை வாய்ப்பில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. கார் டிரைவர் பணி திருநங்கைகளுக்கு சவுகரியமானது. ஆரம்பத்தில் எனது காரில் சவாரி செய்வதற்கு பயணிகள் தயங்கினார்கள். இப்போது அவர்களிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பலர் என்னுடைய டிரைவர் பணியை பாராட்டினார்கள். என் குடும்பத்தினரும் என்னை சேர்த்துக்கொண்டார்கள்’’ என்கிறார்.

மேக்னா ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். திருநங்கைகள் நலனில் அக்கறை காட்டி வரும் ஒரு இளைஞரை திருமணம் செய்திருக்கிறார். ஒரு குழந்தையையும் தத்தெடுத்து பாசமாக வளர்த்து வருகிறார்.

Next Story