ரத்தக்காட்டேரிகள் வாழ்ந்த திகில் கோட்டை
உலகை வலம் வர விருப்பப்படும் சுற்றுலா பிரியர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் பிரபலமான நாடுகளில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் தங்கள் காலடி தடத்தை பதித்துவிட அலாதி ஆர்வம் காட்டுகிறார்கள்.
உலகை வலம் வர விருப்பப்படும் சுற்றுலா பிரியர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் பிரபலமான நாடுகளில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் தங்கள் காலடி தடத்தை பதித்துவிட அலாதி ஆர்வம் காட்டுகிறார்கள். சிலர் அதிகம் அறியப்படாத நாடுகளுக்கு சென்று ஆனந்தம் கொள்கிறார்கள். இந்த உலகில் சின்னஞ்சிறு நாடுகள்கூட ஆச்சரியப்படவைக்கும் அரிய பொக்கிஷங்களை சுமந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறு நகரங்கள் ஆச்சரியப்படவைக்கும் அழகிய கட்டிடங்களையும், கலைகளையும், சுவாரசியமிக்க பின்னணிகளையும் கொண்டிருக்கின்றன. அங்கு தனது நண்பர்கள் குழுவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சேலத்தை சேர்ந்த டாக்டர் வி.பி.ஈஸ்வரன் தனது பயண அனுபவங்களையும், அங்குள்ள பாரம்பரிய அம்சங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
‘‘கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல இருந்தாலும் நாங்கள் குறிப்பிட்ட 7 நாடுகளை தேர்வு செய்து பயணம் புறப்பட்டோம். மாவீரன் அலெக்சாண்டர் பிறந்து வளர்ந்து, தன் படையெடுப்பை ஆரம்பித்த மாசடோனியா நாட்டுக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்ேடாம். அடுத்து டிராகுலா (ரத்தக்காட்டேரி) கதைகளை படித்த ஆர்வமும், அதனைப் பற்றி வந்த பல சினிமாக்களும் அங்கு செல்லும் ஆர்வத்தை தூண்டியது. 1992-ம் ஆண்டுகளில் செர்பியா, போஸ்னியா சண்டையைப் பற்றி தினமும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. மேலும் கிழக்கு ஐரோப்பியாவை சேர்ந்த மக்கள் ரொம்ப கடுமையானவர்கள், சண்டைக்காரர்கள், தங்கள் கலாசாரத்தைப் பற்றிய கர்வம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட எதிர்மறையான செய்திகளும் அங்கு செல்லும் ஆவலைத் தூண்டின.
பொதுவாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளை கம்யூனிஸ்ட் பிளாக் என்று சொல்வார்கள். மார்ஷல் டீட்டோ இருந்தவரை அனைத்து நாடுகளையும் இணைத்து எந்த வல்லரசின் பக்கமும் சேராமல் அணி சாரா நாடுகள் இயக்கம் தொடங்கினார். அவரின் மறைவுக்குப் பின் எல்லா நாடுகளும் பிரிந்துவிட்டன. நாங்கள் முதலில் கிழக்கு ஐரோப்பாவின் முக்கிய நாடுகளுள் ஒன்றான ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கு சென்றோம். அது மிக அழகான ஊர். நடுவில் ஓடும் டெனுபி ஆறு புடாபெஸ்டை இரண்டாக பிரிக்கிறது. மிக சுத்தமான நகரம். ஐரோப்பிய கலாசாரத்தின்படி ஒழுங்கு முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள், மிகக் குறைவான மக்கள். மிக அகலமான ரோடுகள் - 6 டிரேக்குகள் - டிராம்கள் எலக்ட்ரிக் பஸ்கள் என பார்ப்பதற்கே அந்த நகரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. டெனுபிப் ஆறு ஓடும் வேகத்தையும், சுத்தத்தையும் பார்த்து வியந்தோம். ஆற்றில் கப்பல் பயணங்கள் செய்யலாம். அங்கேயே உணவு விடுதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. அங்கு ஏராளமாக ஏரிகள் இருந்தாலும், பெர்டோ ஏரியை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது.
ஹங்கேரி ஆரம்பத்தில் விவசாயம் சார்ந்த நாடாக இருந்தாலும், பிற்காலத்தில் அங்கு தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை அதிகரித்த பெருமை ரஷியாவுக்குத்தான் உண்டு. மேற்கத்திய நாடுகள் புதிய விஞ்ஞான முன்னேற்றங்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தே வைத்திருந்தார்கள் என்பது அங்குள்ள மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. இரவில் பெரும்பாலான உணவுவிடுதிகளில் ஹங்கேரிய கலாசார நடனம் அரங்கேறுகிறது. எங்கு பார்த்தாலும் ஓயின் பாட்டில்களை அடுக்கி வைத்துள்ளார்கள். வேண்டியவர்களுக்கு தருகிறார்கள். தண்ணீரை விட ஒயின் தான் இங்கு பிரசித்தம். இங்கு சீனர்கள்தான் அதிகமாக சுற்றுலா வருகிறார்கள்.
அடுத்தாக பல்கேரியா நாட்டிற்கு பயணப்பட்டோம். அங்கிருந்து ருமேனியா சென்றோம்.
அங்குள்ள பிரோசோ நகருக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அந்த பகுதியைதான் டிரான்சில்வேனியா என்று சொல்கிறார்கள். அங்கு ரத்தக் காட்டேரிகள் வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ சினிமாக்கள் டிராகுலா கதையைப் பரப்புவதால் அதை உண்மையென நம்பும் மக்களும் இருக்கிறார்கள். அங்கே கடைகளில் பூண்டு கட்டி தொங்க விட்டுள்ளார்கள். ரத்தக் காட்டேரிக்கு பூண்டு ஆகாதாம். அவை வாழ்ந்ததாக கூறப்படும் கோட்டைகளை திகிலோடு பார்த்து பிரமித்தோம். டிராகுலாவின் உடை திகிலான தோற்றத்தை தருகிறது.
அங்கிருந்து சோபியா சென்று, பின்னர் மாசடோனிய தலைநகரம் ஸ்கோபியை சென்றடைந்தோம். அலெக்சாண்டர் பிறந்து, வாழ்ந்து, தன் படையெடுப்பை தொடங்கிய நகரம் அது. அப்போது கிரேக்க நாடு, அல்பேனியா எல்லாம் ஒன்றாக இருந்திருக்கின்றது. அழகான வார்டார் ஆறு அலெக்சாண்டர் சதுக்கத்தை ஒட்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அதை ரசித்துவிட்டு அன்னை தெரசா பிறந்து, வளர்ந்து, படித்த இடத்திற்கு சென்றோம். நினைவகத்தின் உள்ளே அவர் நினைவை போற்றும் சின்னங்கள், புகைப்படங்களை வைத்துள்ளனர். ஸ்கோபி வரும் யாரும் இங்கு வராமல் போவதில்லை.
பயணத்தில் குரோஷியா எங்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு டுப்ரோவிங் என்ற பகுதியை அடைந்தோம். கடற்கரையொட்டி 1940 மீட்டர் அளவு ஒரு பாதுகாப்பு அரண் உள்ளது. ஒரு பக்கம் பசுமையான மலைப் பிரதேசம். மறுபக்கம் அழகான கடற்கரை, தீவுகள், கட்டிடங்கள் என அழகை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. எங்கு பார்த்தாலும் பண்டைய நாகரிகத்தை பறைசாற்றும் கோட்டைகள் கம்பீரமாக நின்றன. அது யுனெஸ்கோவால் பாரம்பரிய நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் மக்கள் அங்கு வசிக்கிறார்கள்..
பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் எல்லாமே விலைவாசி அதிகம் தான். அங்கு இந்திய ரெஸ்டாரெண்டுகளுக்கும் குறைவில்லை. ஆனால் நம் நாட்டு மதிப்பில் நல்ல சாப்பாட்டின் விலை 1200 ரூபாய். வளமான விவசாய பூமி, இயற்கை வளம், மலைகள், மழை பெய்யும் காடுகள், அழகிய கடற்கரை பிரதேசங்கள் இருந்தும் கம்யூனிச ஆட்சிக்கு (1990-க்கு பின்புதான்) வளர்ச்சி அடைய தொடங்கி இருக்கின்றன. எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் சதுக்கங்கள், சர்ச்சுகள், பழைய கோட்டைகள், அரண்மனைகள், கலைநயம் மிக்க கட்டிடங்களை பொலிவு மாறாமல் கட்டமைத்து உள்ளார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு அமர்க்களமாக வாழ்கிறார்கள். மொத்தத்தில் இந்த நாடுகள் அனைத்திலும் ஐனத்தொகை குறைவாக இருப்பதால் இயற்கை காட்சிகள் சேதாரமின்றி சிறப்பாக நம்மை வரவேற்கின்றன” என்கிறார்.
Related Tags :
Next Story