மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்


மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்
x
தினத்தந்தி 9 Sep 2018 11:15 AM GMT (Updated: 9 Sep 2018 11:15 AM GMT)

கெண்டை மீன் வளர்ப்பு உள்நாட்டுப் பகுதிகளில் நன்னீர் நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. பொது நீர் நிலைகளில் மட்டுமே கெண்டை மீன் உற்பத்தி செய்யப்பட்ட நிலைமாறி சொந்த நிலத்தில் வெட்டப்பட்ட குளங்களிலும் கெண்டை மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கெண்டை மீன் வளர்ப்பு உள்நாட்டுப் பகுதிகளில் நன்னீர் நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. பொது நீர் நிலைகளில் மட்டுமே கெண்டை மீன் உற்பத்தி செய்யப்பட்ட நிலைமாறி சொந்த நிலத்தில் வெட்டப்பட்ட குளங்களிலும் கெண்டை மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. எளிமையான பராமரிப்பில் அதிக லாபம் கிடைப்பதால், இத்தொழில் வேகமான வளர்ச்சியைப் பெற்றுவருகிறது.

கெண்டை மீன்வளர்ப்பு தொழில்நுட்பம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டு மீன் வளர்ப்பு முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய தொழிலாக இருந்தமையால் முதலீட்டு செலவுகளை குறைக்கும் நோக்கில் இத்தொழில்நுட்பம் பொது நீர்நிலைகளான பாசனக்குளங்கள், குட்டைகள், ஊரணிகள் போன்றவற்றில் செயல்படுத்தப்பட்டது. குளங்களுக்குள் உரமிட்டு மீன்களுக்கு மேல்உணவு அளிக்கும் தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொடக்க காலத்தில் இந்த வகை வளர்ப்பு மீன்களுக்கு பெரிய அளவில் தேவையோ, விற்பனை வாய்ப்புகளோ இருந்ததில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கிய விழிப்புணர்வு, மாறிவரும் உணவு பழக்கங்கள் போன்ற காரணங்களால் மீன்களுக்கான தேவை பெருகியுள்ளது.

அதே வேளையில் நம்மிடம் அமைந்துள்ள வளங்களின் அளவு பெருகிடவில்லை. தனியார் பலர் மீன்பண்ணைகள் அமைப்பதால் மீன்வளர்ப்பு பண்ணைகளின் பரப்பளவு பெருமளவு அதிகரித்துள்ளது. ஆனால் மீன்வளர்ப்புக்கு அடிப்படையான நிலத்தடி நீர்வளம் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் வளங்களை சேதப்படுத்தாமல் செம்மையாக பயன்படுத்தி அதிக உற்பத்தி திறனை பெறுவதற்கு பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது, ‘தீவனம் சார்ந்த கெண்டை மீன்வளர்ப்பு’.

மீன்கள் வேகமான வளர்ச்சியைப் பெற தரமான தீவனம் இன்றியமையாதது. அதே வேளையில் நீர் தரமாக இருந்ததால்தான் தீவனத்தின் முழு பயனையும் பெற முடியும். பெரும்பாலான கெண்டை மீன்வளர்ப்பு பண்ணைகளில், மீன்களுக்கான இயற்கை உணவுகளை உற்பத்தி செய்வதற்காக உரங்கள் தவணை முறைகளில் குளங்களுக்கு இடப்படுகின்றன. சாணம் என்பது ஒரு கழிவுப்பொருள். அதில் சத்துக்களை விட கழிவு பொருட்களே அதிக அளவில் உள்ளன. சாண உரத்தை அதிக அளவில் தொடர்ந்து குளங்களில் இடும்போது கழிவுகள் அதிகளவில் சேருகின்றன. இந்த நிலை தொடரும்போது, குளங்களில் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும். அதனால் நச்சுவாயுக்களின் உற்பத்திஅதிகரித்து மீன்களின் வளர்ச்சி பாதிக்கும்.

குளங்களில் இடப்படும் சாணம், நுண்ணியிரிகளால் சிதைக்கப்பட்டு அதனால் வெளியாகும் ஊட்டச்சத்துக்கள் மீன்களுக்கான இயற்கை உணவு உயிரினங்கள் உற்பத்தியாக துணைபுரிகின்றன. இந்த குறிப்பிட்ட வினையின் வேகமானது நீரின் வெப்பநிலையை பொருத்து மாறுகிறது. அதாவது மழைக்காலங்களில் குளக்கழிவுகள் சிதைக்கப்படும் வேகம் மிகக்குறைவாகவே இருக்கும். இதனால் மீன்களுக்கான இயற்கை உணவு உற்பத்தியின் அளவும் குறைவாகவே இருக்கும். அதே வேளையில் கோடையில் நேர் எதிரான சூழ்நிலை உருவாகும். எனவே, உரமிட்டு உருவாக்கப்படும் உணவு உற்பத்தி ஆண்டு முழுவதும் சீராக இருப்பதில்லை.

பொதுவாக, மீன்களின் சீரிய வளர்ச்சிக்கு 30 விழுக்காடு புரதச்சத்து கொண்ட தீவனம் பரிந்துரைக்கப்படுகிறது. அதன் விலை அதிகமாக இருப்பதால், புரதச்சத்து கொண்ட மீன் தீவனங்கள் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டு பண்ணைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உரமிட்டு மேலுணவு அளித்து மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்படும் குளங்களில், தீவனத்திற்கு போதுமான முக்கியத்துவம் அளிப்பதில்லை. அங்கு குறிப்பிட்ட வேளாண் உபபொருட்களை இடுபொருட்களாக பயன்படுத்திப் பண்ணைகளிலேயே தூள் வடிவிலுள்ள தீவனம் தயாரிக்கப்பட்டு மீன்களுக்கு அளிக்கப்படுகிறது.

அத்தகைய தீவனங்களில் தவிடு பிரத்யேக இடுபொருளாகவும், புண்ணாக்கு வகைகள், அரிசி மற்றும் சிறு தானியங்கள் போன்றவை குறைந்த அளவிலும் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் தீவனங்களில் ஏறத்தாழ 10-12 விழுக்காடு புரத சத்தே உள்ளது. அவற்றின் செரிமானத் தன்மையும், உணவு மாற்றுத் திறனும் மிக குறைவு. இந்த முறையால் தீவன விரயம் ஏற்படும். மீன்களின் வளர்ச்சிக்கு போதுமான சத்துக்களும் கிடைப்பதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மீன் உற்பத்தி குறையும்.

இந்த நிலையை மாற்றிட வளர்ப்பு மீன்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தேவையான அளவில் அளிக்கும் நல்ல செரிமானத்தன்மை கொண்ட தரமான தீவனம் மிக அவசியம். இன்றைக்கு பல முன்னோடி மீன்வளர்ப்போர் அனுபவரீதியாக இந்த உண்மையை உணர்ந்து, தீவனம் சார்ந்த கெண்டை மீன்வளர்ப்பை மேற்கொண்டு அதிக உற்பத்தியும், அதிக வருவாயும் பெறுகின்றனர். இந்த முறையில் மீன்களை வளர்க்கும்போது, நீர் அதிகளவில் மாசுபடாமல் இருக்கிறது. இதனால், குளத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும். அதிக அளவில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்யலாம். மீன்களும் வேகமாக வளருகின்றன. அதிக சுவையுடனும் இருக்கும். இந்த முறையில் ஒரு கிலோ மீன் உற்பத்தி செய்வதற்கு 1.3 முதல் 1.5 கிலோ கிராம் வரை உணவு தேவைப்படும்.

உணவு சார்ந்த கெண்டை மீன்வளர்ப்பை மேற்கொள்ளும்போது கூடுதலாகும் செலவுகளை எதிர்கொள்ள அதிக முதலீடு தேவைப்படுகிறது. இம்முறையில் மீன்களுக்கான உற்பத்தி செலவும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் குளங்களிலிருந்து அதிக மீன் உற்பத்தியை பெறுவதால், நிகர வருவாய் பெருகும். இந்த முறையை வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்திட நன்கு வளர்ந்த மீன்குஞ்சுகள் தேவைப்படுகின்றன. அவை ஆறு அங்குல நீளம், சுமார் 50 கிராம் எடை கொண்டதாக இருக்கவேண்டும். இத்தகைய வளர்ச்சி அடைந்த மீன்குஞ்சுகளை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு எடுத்துச்செல்வது சிரமமான ஒரு செயலாகும். எனவே, பண்ணையாளர்கள் தமது பண்ணைகளிலேயே மீன்குஞ்சு வளர்ப்பதற்காக பிரத்யேக குளங்களை ஏற்படுத்திக் கொண்டால் ஆண்டு முழுவதும் பண்ணைகளில் தீவனம் சார்ந்த முறையில் மீன்களை வளர்த்து பயன்பெறலாம்.

இந்த வகை மீன்வளர்ப்பு முறையில் சந்தைகளில் அதிக தேவையுள்ள ரோகு போன்ற இனங்களை அதிகமாகவும், கட்லா, மிர்கால் போன்ற இனங்களை குறைந்த அளவிலும் இருப்பு செய்து, வளர்த்து பயன்பெறலாம். இம்முறையில் ரோகு மீன்களை 80 விழுக்காடும், கட்லா 10 விழுக்காடும், மிர்கால் 8 விழுக்காடும், புல்கெண்டை 2 விழுக்காடும் இருப்புச் செய்யலாம். ரோகு மீன்களின் எடையைக் கணக்கிட்டு தீவனம் அளித்தால் போதுமானது. அதன் தீவனக் கழிவுகள் மிர்கால் இனத்திற்கும், குளத்தில் உருவாகும் விலங்கின நுண்மிதவைகள் கட்லாவுக்கும் உணவாகிவிடும்.

ஒவ்வொரு வேளையும் மீன்கள் எவ்வளவு வேகமாக தீவனம் எடுக்கின்றது என்பதைப் பொறுத்து அடுத்தவேளையின் தீவன அளவினை கணக்கிடவேண்டும். போடப்பட்ட தீவனம் ½ முதல் ¾ மணி நேரத்திற்குள் உண்ணப்பட்டால் போதுமான தீவனம் இருப்பதாக கருதலாம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வைக்கப்பட்ட தீவனம் மீதப்பட்டு இருந்தால் அடுத்த வேளை தீவனத்தில் 5 முதல் 10 விழுக்காடு குறைத்துக் கொள்ளலாம். அரைமணி நேரத்திற்குள்ளாகவே தீவனம் முழுமையாக உண்ணப்பட்டுவிட்டால் அடுத்த வேளை தீவனத்தை சற்று அதிகரிக்கவேண்டும்.

அவரவர் பண்ணையிலேகூட தேவையான வேளாண் இடுபொருட்களை பயன்படுத்தி தீவனம் தயாரித்துக்கொள்ள முடியும் என்ற போதிலும், வர்த்தகரீதியில் உற்பத்தி செய்யப்படும் தீவனங்களைப் பயன்படுத்துவது நமக்கு எளிதாக இருக்கும். வர்த்தக ரீதியாக தயாரிக்கப்படும் மீன் தீவனங்களில் மூழ்கும் உணவுக்குறுணை மற்றும் மிதக்கும் உணவுக்குறுணை என இருவகைகள் உள்ளன. மூழ்கும் தீவனக்குறுணைகளைப் பயன்படுத்தும்போது நீரின் தரம் கெட வாய்ப்புண்டு. ஆனால் மிதக்கும் குறுணைகளை பயன்படுத்தும்போது தீவன விரயத்தை முழுமையாகத் தவிர்க்கலாம்.

தீவனம் சார்ந்த மீன்வளர்ப்பை மேற்கொள்ளும் போது தீவனத்தை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான அறைகள் தேவை. தீவனத்தை காலையில் சூரிய உதயத்திற்கு 1½ முதல் 2 மணி நேரத்திற்குப் பிறகும், மாலையில் 4½ முதல் 5 மணிவாக்கிலும் இருவேளைகளாக அளிக்கலாம். இதற்கான பதிவேடுகளும் பராமரிக்கப்படவேண்டும். 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மாதிரி மீன்பிடிப்பு நடத்தி மீன்களை எடைபோட்டு பார்க்கவேண்டும். குறிப்பிட்ட கால அளவில் மீன்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதையும் பதிவு செய்திடல் வேண்டும். மீன்களின் வளர்ச்சி விற்பனை வாய்ப்பிற்கேற்ற எடையை அடைந்துவிட்டால் வளர்ந்த மீன்களை பகுதி அறுவடை செய்து குளத்தில் மீன்களின் இருப்பைக் குறைக்கலாம். அதற்கு பதிலாக புதிய மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யலாம். இவ்வாறாக முறையான மேலாண்மை முறைகளை கையாண்டால், கெண்டை மீன்வளர்ப்பில் ஒரு ஏக்கர் குளத்தில் ஒரு ஆண்டில் 3 முதல் 4 டன் மீன்களை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் சுமார் ரூ. 2 லட்சம் நிகர வருவாய் பெறலாம்.

(தொடரும்)

கட்டுரை: பேராசிரியர்கள் குழு, தமிழ்நாடு டாக்டர் ெஜ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்.

Next Story