முன்னறிவிப்பு இன்றி ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு: அம்பராம்பாளையம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் சிக்கினர்


முன்னறிவிப்பு இன்றி ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு: அம்பராம்பாளையம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 10 Sept 2018 4:30 AM IST (Updated: 10 Sept 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

முன்னறிவிப்பு இன்றி நேற்று ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அம்பராம்பாளையம் ஆற்றில் திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காடம்பாறை, அப்பர் ஆழியாறு ஆகிய இடங்களில் நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மின் உற்பத்திக்கு பின் காடம்பாறை, அப்பர் ஆழியாறு மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆழியாறு அணைக்கு வரத்தொடங்கியது. ஏற்கனவே அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்ததால் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 232 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அணைக்கு திடீர் என்று நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறை அதிகாரிகள் நேற்று காலை 6 மணி அளவில் ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக முதலில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் படிப்படியாக அதிகரித்து அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இவ்வாறு முன்னறிவிப்பு எதுவும் இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றில் 10 மணி அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அங்கு துணி வைத்து கொண்டும், குளித்து கொண்டும் இருந்த பலர் சுதாரித்து கொண்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆற்றில் இருந்து வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர்.

இதில் ஆற்றின் மையப்பகுதியில் இருந்த மாக்கினாம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 40), போடிபாளையத்தை சேர்ந்த சத்தியாதேவி (32), கருப்பசாமி (36) ஆகியோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களால் கரைக்கு திரும்ப முடியவில்லை. 3 பேரும் வெள்ளத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் தடுமாறி அங்கிருந்த பாறையை பிடித்துக்கொண்டனர்.

பின்னர் பாறை மீது அமர்ந்து கொண்ட 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி சத்தம்போட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு காலை 10.45 மணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கண்ணன், ராஜ், உமாபதி, சுல்தான் ஆகியோர் விரைந்து வந்தனர்.

ஆற்றின் கரையில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கயிற்றை பிடித்துக்கொண்டனர். மறுமுனையை பிடித்துக்கொண்டு 5 வீரர்கள் ஆற்றில் இறங்கி நீந்தி பாறையில் அமர்ந்து இருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாறையில் அமர்ந்து இருந்தவர்களை பாதுகாப்பு உடையை அணியச் செய்து ஒருவர் பின் ஒருவராக ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் 3 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.


Next Story