குயவன்குடி அருகே கார்–வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் படுகாயம்
குயவன்குடி அருகே கார்–வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர்.
பனைக்குளம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சதாசிவபுரம் அருகே உள்ள சூரங்காட்டு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 50) என்பவர் தனது குடும்பத்தினர் 9 பேருடன் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று மாலை ராமேசுவரத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஊருக்கு திரும்பி சென்றனர். காரை மாணிக்கம் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் குயவன்குடி அருகே வந்தபோது, எதிர்பாராதநிலையில் எதிரே வந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த மாணிக்கம், பூங்கொடி(41), அருண்குமார் (25), சுதா (27), பொன்னம்மாள் (22), கவுதமன் (12), ஸ்ரீதரன் (9), கீர்த்திகா (4), ஜனனி (3) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.