ராமநாதபுரம் அருகே கார் மரத்தில் மோதி கட்டிட காண்டிராக்டர் உள்பட 4 பேர் பலி
ராமநாதபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் 4 பேர் பலியாகினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் அந்தோணிராஜ். இவர் காரில் அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50), கோவிந்தம்மாள், கீதா ஆகியோருடன் ராமநாதபுரம் சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
உச்சிப்புளி அருகே அம்மாச்சி அம்மன் கோவில் அருகில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தோணிராஜ் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காரில் இருந்து 3 பெண்களின் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வீரராகவராவ் விபத்து குறித்து கேட்டறிந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.