குட்கா விவகாரத்தில் எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


குட்கா விவகாரத்தில் எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Sept 2018 4:15 AM IST (Updated: 10 Sept 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

குட்கா விவகாரத்தில் எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் வருகி 13–ந்தேதி முதல் சைக்கிள் பேரணி, பிரசாரம் மற்றும் நடைபயணம் தொடங்க உள்ளது. இதற்காக ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தொண்டர்களை ஒருங்கிணைத்து ஜெயலலிதாவின் சாதனை திட்டத்தை எடுத்து சொல்லி வாக்கு கேட்க இருக்கிறோம். இதற்காக 3,000 ஜெயலலிதா பேரவை தொண்டர்களை திரட்டி சைக்கிள் பேரணி, பிரசாரம், தெருமுனை கூட்டம், நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். அங்கு எப்போது தேர்தல் நடந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். திருப்பரங்குன்றத்தில் உள்ள 295 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 10 இளைஞர்களை தேர்வு செய்து இருக்கிறோம். தொகுதியில் தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்தி, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை முன்னிறுத்தி இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

இடைத்தேர்தலுக்கான சைக்கிள் பேரணி பிரசாரம் வருகிற 13–ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தனக்கன்குளத்தில் இருந்து தொடங்க இருக்கிறோம். திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை சிறப்பாக செய்து இருக்கிறோம். எனவே அந்த தொகுதி மக்கள் இரட்டை இலை மீதும், அ.தி.மு.க. மீதும் அதிகப்பற்று உடையவர்கள். ஆதலால் இந்த இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. தொண்டர்களின் தலைமை ஏற்று நடத்துகிற இயக்கம். எங்களுக்கு எதிரி என்பது ஓரளவு வாக்கு வங்கி உள்ள தி.மு.க.தான். எனவே களத்தில் அவர்களை அ.தி.மு.க.வின் சாதனைகளை சொல்லி எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

ஜெயலலிதா இன்று இல்லாவிட்டாலும், அவருடைய அனைத்து கனவுகளையும் நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. இப்போதுள்ள அரசு எல்லா தடைகளையும் தகர்த்து எறிந்து ஜெயலலிதாவின் ஆட்சியை சிறப்பாக செயல்படுகிறது. அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து 46 ஆண்டுகள் மக்கள் செல்வாக்குடன் வீறுநடை போடுகிறது. பொது வாழ்க்கையில் அதன் நற்பெயரை சிதைக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தகர்த்தெறிந்து அ.தி.மு.க. களங்கம் இன்றி மக்கள் இயக்கமாக வீறுநடை போடுகிறது. எனவே மக்கள் அ.தி.மு.க.வை காப்பாற்றுவார்கள்.

குட்கா விவகாரத்தில் எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது தோல்வி அடைந்து விடும். மேலும் பொது வாழ்க்கையில் இருந்தால் மன தைரியத்தோடு பொய் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, பேரறிஞர் அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயத்தோடு, சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு, சோதனைகளை சாதனைகளாக மாற்றும் சக்தி அ.தி.மு.க.விற்கு உண்டு. எனவே மன தைரியத்தோடு ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வோம்.

தேர்தலுக்கு பிறகு புதுப்புது கட்சிகள் எல்லாம் காணாமல் போய் விடும். டி.டி.வி.தினகரன் மதுரையில் தேனி ஊர்காரரை வைத்துச் சவால் விட வைக்கிறார். உள்ளூர்காரர் ஆகிய நான் சவால் விடுகிறேன். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தலைமை வியூகத்தை செயல்படுத்தி வெற்றி பெறுவோம். பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து அரசின் முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story