புஞ்சைபுளியம்பட்டி அருகே வேன்– மோட்டார் சைக்கிள் மோதல்; 1½ வயது குழந்தை சாவு
புஞ்சைபுளியம்பட்டி அருகே வேன்– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும், பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி நேருநகர் பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்த ஜோதி (35) என்ற பெண்ணுடன் மீன் வாங்க புஞ்சைபுளியம்பட்டி அருகே பெரியகள்ளிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மருதுபாண்டி என்பவருடைய மகன் லலித் என்கிற விருமாண்டியை (1½) அழைத்துச்சென்றனர். மோட்டார் சைக்கிளை அங்குசாமி ஓட்டினார். பின்னால் ஜோதி உட்கார்ந்து இருந்தார். மேலும் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது லலித் அமர்ந்து இருந்தான்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே மல்லியம்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த தனியார் மில் வேனும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அவர்கள் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த குழந்தை உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே லலித் பரிதாபமாக இறந்தான். அங்குசாமியும், ஜோதியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.