கிராமப்புறங்களில் குப்பைகள் அகற்றப்படாததால் ஆத்திரம்: அதிகாரிகளுக்கு கவர்னர் எச்சரிக்கை
கிராமப்புறங்களில் குப்பைகள் அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பாகூர்,
கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருக்கும்போது வார இறுதி நாட்களில் கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீப காலமாக அவர் தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்குவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பெடி கண்தானம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சைக்கிளில் செல்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவளக்குப்பம் அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியில் இருந்து சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொண்டார்.
அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அபிஷேகப்பாக்கம், தாமரைக்குளம் பூரணாங்குப்பம், புதுக்குப்பம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம், தானம்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியை அடைந்தது. ஊர்வலத்தில் கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்திரி, அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி வெங்கடேஷ், டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்தின்போது, ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள், சுகாதார சீர்கேடு மிகுந்த இடங்களை செல்போனில் கவர்னர் படம்பிடித்துக்கொண்டார். ஊர்வலம் பூரணாங்குப்பம் ரோட்டில் வந்தபோது அங்கு குப்பைகள் அகற்றப்படாமல் சாலையோரம் குவிந்து கிடந்ததை கண்டு கவர்னர் கிரண்பெடி கடும் ஆத்திரம் அடைந்தார்.
உடனே தன்னுடன் வந்த அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி, உதவி பொறியாளர் யுவராஜ் ஆகியோரை அழைத்து குப்பைகள் அள்ளாதது குறித்து விளக்கம் கேட்டார். குப்பைகள் சேர்ந்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் என்பது தெரியாதா? என்று அதிகாரிகளிடம் கேள்விகேட்டார்.
குப்பைகள் தேங்காமல் அன்றைய தினமே அகற்றவேண்டும், குப்பைகள் அள்ளப்படுவதை தினமும் காலையில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் சைக்கிளில் சென்று ஆய்வு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். போலீசார் போல் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு பணியை மேற்கொள்ளவேண்டும் என்று கிரண்பெடி எச்சரிக்கை விடுத்தார்.