அதிவேகமாக சென்ற சொகுசு கார்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி
புதுவையில் அதிவேகமாக இயக்கப்பட்ட சொகுசு கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி,
புதுவைக்கு வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் விதவிதமான கார்களில் வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான அதிநவீன சொகுசு கார்களில் வாலிபர்கள் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
அவர் கடற்கரை சாலை, போலீஸ் தலைமையக பகுதிகளில் காரை அதிக சத்தத்துடன் வேகமாகவும், அபாயகரமாகவும் ஓட்டினார்கள். இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கார்கள் சென்ற விதத்தை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கார்களை மடக்கினார்கள். அந்த கார்களை ஓட்டிவந்த வாலிபர்களை பிடித்து எச்சரித்தனர்.
பின்னர் கார்களை அபாயகரமாகவும், அதிவேகமாகவும் ஓட்டியதாகவும் கூறி 3 கார்களுக்கும் தலா ரூ.1000 அபராதத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் விதித்தார். அந்த அபராத தொகையை செலுத்திவிட்டு வாலிபர்கள் அந்த காரை ஓட்டி சென்றனர்.