மோதலை உருவாக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் பரவும் தவறான தகவல்கள் புறக்கணிக்க போலீசார் அறிவுறுத்தல்
மோதல் ஏற்படும் வகையில் வாட்ஸ் அப்பில் பரவும் தவறான தகவலி புறக்கணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
விநாயகர் சதுர்த்தி, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் ஆகியவை தொடர்பாக அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்துக்கு வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். வெம்பக்கோட்டை சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்புராஜ், தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். தாயில்பட்டி, கோட்டையூரில் திருமண மண்டபங்களில் நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நினைவிடத்துக்கு வாகனத்தில் செல்வோருக்கு எந்த விதமான இடையூறும் செய்யக்கூடாது என்றும் வழி தவறி சிலர் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டிட வேண்டுமே தவிர வன்முறைக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் வந்த தவறான தகவலை பரவ விட்டதால் 2 கிராமங்களில் 10 நாட்களுக்கும் மேலாக போலீசாரை குவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற பணிகளை போலீசார் கவனிக்க முடியாததோடு பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டது. எனவே மோதலை உருவாக்கும் வகையில் சந்தேகத்துக்குரிய வாட்ஸ் அப் தகவல் வந்தால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்றும் எடுத்துக்கூறப்பட்டது.
கிராமங்களில் ஏற்படும் சிறிய பிரச்சினையை தொடக்கத்திலேயே பேசி தீர்த்துக்கொண்டால் சுமூக உறவை தொடர்ந்து பேண இயலும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.