ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது பொய்யான தகவல் - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது பொய்யான தகவல் - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 10 Sept 2018 4:45 AM IST (Updated: 10 Sept 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது பொய்யான தகவல் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

சூரமங்கலம்,

தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது பொய்யான தகவல் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

சேலம் உருக்காலை மன மகிழ் முத்தமிழ் மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு, நாடகம், கிராமியநடனப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மோகன் நகரில் நேற்று நடைபெற்றது. மன்ற செயலாளர் செங்காகவுண்டன் வரவேற்று பேசினார். உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உயர்கல்வித்துறை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. 2017-18-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 48.6 சதவீதம் பெற்று இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உயர்கல்வி துறையில் போதிய ஆசிரியர்கள் உள்ளனர். எனவே தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது பொய்யான தகவல்.

மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்காத வகையில் 3,500-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 2018-19-ம் கல்வியாண்டில் 216 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய பாடத்திற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஈவ்டீசிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் இரும்பாலை தனியார் மயமாக்க தமிழக அரசு அனுமதிக்காது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

விழாவில் சேலம் உருக்காலை நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) சிதம்பரம், துணை பொது மேலாளர்கள் உதயகுமார், ஜெயந்தி, வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மனோன்மணி, மனமகிழ் முத்தமிழ் மன்ற துணை தலைவர் ராமலிங்கம், பொருளாளர் ஆனந்த், இணை செயலாளர் சந்திரகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story