நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பு


நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பு
x
தினத்தந்தி 10 Sept 2018 3:15 AM IST (Updated: 10 Sept 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 200 சதவீதம் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

தேனி,


தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட சுமார் 200 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. மழைக்காலத்தை கருத்தில் கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் முன்கூட்டியே தூர்வாரும் பணிகள் முடிந்த அளவுக்கு மேற்கொள்ளப்பட்டன. அரசுத்துறைகளின் மூலமாகவும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலமும், பொதுமக்கள் மூலமும் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், அதிக மழைப்பொழிவு ஏற்பட்ட போதிலும் எந்த பகுதியிலும் கரைகள் உடைப்போ, பலத்த மழைச் சேதங்களோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது. கண்மாய்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதன் மூலம் அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து நீர்மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். தேனி ராஜவாய்க்காலை தூர்வாரும் முயற்சி நடந்து வருகிறது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story