அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 10 Sept 2018 5:21 AM IST (Updated: 10 Sept 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1,594 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. மீண்டும் வருகிற 23-ந் தேதி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, 


தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கும் வாக்காளர்கள் உரிய விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்தனர்.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.சி.மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் மாரியப்பநாடார் நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகை தந்துள்ளனரா என்பதையும், போதிய விண்ணப்ப படிவங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தூத்துக்குடி தாசில்தார் சிவகாம சுந்தரி, தூத்துக்குடி வட்ட தேர்தல் துணை தாசில்தார் ரம்யாதேவி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 1,594 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதே போன்று 23-9-2018, 7-10-2018, 14-10-2018 ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் மனுக்கள் பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்துக்கு பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் இந்த பணிகளை ஆய்வு செய்ய வருகை தர உள்ளனர்.

எனவே தூத்துக்குடி மாவட்ட மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி 100 சதவீதம் முழுமையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என அவர் கூறினார். 

Next Story