நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் என்று கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் தெரிவித்தார்.
புளியங்குடி,
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தினமும் பெட்ரோல் விலையை ஏற்றி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இத்தனை காலமும் பெட்ரோல் விலை தினமும் ஏற்றியது கிடையாது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி, இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளது. இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்கின்றன.
2014-ம் ஆண்டு ஒரு டாலர் இந்திய பண மதிப்பில் 59 ரூபாயாக இருந்தது. அப்போது பாரதீய ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். இன்று பா.ஜ.க. ஆட்சியில் ஒரு டாலர் 72 ரூபாயாக உயர்ந்து விட்டது. இதன் காரணமாக நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்ததன் மூலம் நாட்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை எத்தனையோ கட்சிகள் ஆட்சி நடத்தினாலும், தற்போது நடைபெறும் ஆட்சியின் மேல் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவப்பெயர் வேறு எந்த அரசுக்கும் ஏற்பட்டது இல்லை. பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தமிழக அரசு ஒரு திறமையற்ற அரசாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி இந்த தேர்தலை நடத்த மறுக்கிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து போட்டியிடும். இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியில் இணைந்து போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், நகர தலைவர் அப்துல் வகாப், ஜமாத் கமிட்டி தலைவர் முகம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story