தேனி கலெக்டரை விமர்சித்து ஆடியோ வெளியிட்ட ரவுடி ‘புல்லட்’ நாகராஜன்


தேனி கலெக்டரை விமர்சித்து ஆடியோ வெளியிட்ட ரவுடி ‘புல்லட்’ நாகராஜன்
x
தினத்தந்தி 10 Sept 2018 3:15 AM IST (Updated: 10 Sept 2018 6:13 AM IST)
t-max-icont-min-icon

சிறைத்துறை, போலீஸ் பெண் அதிகாரிகளை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டரை விமர்சித்து ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தேனி, 


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். போலீஸ் தரப்பில் இவர் பிரபல ரவுடி என்று சொல்லப்படுகிறது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், அவருடைய மற்றொரு ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இந்த முறை தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருக்கிறார்.

தற்போது வெளியாகி உள்ள ஆடியோவில் ‘புல்லட்’ நாகராஜன் பேசியுள்ளதாவது:-

தேனி போலீசுக்கு ஒன்று சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் தான் பெரிய அறிவாளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்களை போல் முட்டாள் யாரும் கிடையாது. பெண்களை கற்பழிப்பது நீங்கள் தான். நான் எஸ்.பி., கலெக்டரையே மாற்றிய ஆள். இப்போது வந்துள்ள கலெக்டர் பல்லவி பல்தேவ் அம்மா வந்து எதுவும் செய்யவில்லை.

என்னை எந்த காரணத்தை கொண்டு ‘புல்லட்’ நாகராஜன் என்று பட்டப்பெயர் வைக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதலில் அது தெரிய வேண்டும். நான் கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறுகிறீர்களே, எங்க அண்ணனை நாயை அடிப்பது போல் அடித்து இருக்கிறார்களே.

ஊர்மிளாவுக்கு சூப்பிரண்டாக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் டாக்டர் காத்திருக்கலாம், நோயாளி காத்திருந்தால் உயிர் போய்விடும். என் அண்ணன் ஊசி போட சொல்லி இருக்கான். ஊசிபோட முடியாது என்றால் போட முடியாது என்று சொல்ல வேண்டியது தானே. அடிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

என்னுடைய வக்கீல்கள் எல்லாம் நன்றி உள்ளவர்கள். நான் வக்கீல் சாதி. நான் சட்டத்தை விரல் நுனியில் வைத்துள்ளேன். என் வீட்டுக்கு சென்று சோதனை நடத்துவதாக இருந்தால், கோர்ட்டில் உத்தரவு வாங்காமல் எதுவும் செய்தீர்கள் என்றால் அம்புட்டு பேரும் ஜெயிலுக்கு போவது உறுதி. குணா, நீ ஒரு முட்டாள். உன்னை யார் சி.பி.சி.ஐ.டி.யில் சேர்த்தது. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு முட்டாள்.

அண்ணன் இப்போ எங்கேயோ போயிட்டேன். டாப் லெவலுக்கு. என் முடியை கூட உன்னால் கண்டுபிடிக்க முடியாது. நீ உலகம் முழுவதும் தேடினாலும் என்னை தொட முடியாது. நானாக விரும்பினால் தான் உன் முன்னால் வருவேன்.

நான் சட்டம் படித்தவன். நான் எப்படி கொலை செய்வேன். தண்டிப்பேன் என்று சொல்லலாம். அது கோர்ட்டில் வைத்து தண்டிக்கலாம். இந்த நாகராஜனுக்கு என்று ஒரு கோர்ட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். நான் பிறந்த மண்ணை விட்டு ஓடிப் போய்விட்டேன் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். என்னை பாதுகாத்துக் கொண்டால் தானே உங்கள் எல்லாருக்கும் ஆப்பு வைக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story