குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2018 1:09 AM GMT (Updated: 10 Sep 2018 1:09 AM GMT)

சின்னசேங்கலில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சேங்கல் ஊராட்சி சின்னசேங்கலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து நீர் எடுத்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நிரப்பி, குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து போனதால் குடிநீர் வினியோகம் செய்யமுடியவில்லை என கூறி மாற்று ஏற்பாடாக காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாயிலிருந்து குடிநீர் பெற குழாய் அமைத்து கொடுத்தனர். அதிலும் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமையால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் மிகவும் சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை சேங்கல்- உப்பிடமங்கலம் சாலையில் ஒன்று திரண்டு அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவும், காவிரி நீரை மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் நிரப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சேங்கல்-உப்பிடமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story