மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 14–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர்கள் முருகன் கருப்பசாமி ஆகியோர் நேற்று காவல் நீட்டிப்புக்காக விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அவர்கள் 3 பேருக்கும் வருகிற 14–ந் தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.
இந்த வழக்கில் இரு கட்டங்களாக 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வருகிற 14–ந் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகிய 3 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.