தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம்


தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம்
x
தினத்தந்தி 11 Sept 2018 4:00 AM IST (Updated: 10 Sept 2018 7:35 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையத்தை கலெக்டர் வீரராகவராவ் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் (மதுரை அலகு) சார்பில் கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை கலெக்டர் வீரராகவ ராவ் திறந்து வைத்து பேசியதாவது:– தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இதுவரை மொத்தம் 22 கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் பணியாளர்கள் குறைந்த விலையில் தரமான கடல் மீன் உணவு வகைகளை உண்டு பயன்பெறும் வகையில் புதிதாக கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையமானது அலுவலக பணி நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்திலும், வார இறுதி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடமான தனுஷ்கோடியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதில் இறால் பிரியாணி, இறால் ப்ரை, மீன் ப்ரை, மீன் குழம்பு சாப்பாடு ஆகியவை தலா ரூ.70க்கும், மீன் கட்லெட், நண்டு சூப் ஆகியவை தலா ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் இந்த கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையத்தில் குறைந்த விலையில் சுவையான உணவு வகைகளை உண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக மேலாளர் செல்வராஜ், துணை மேலாளர் மாசிலாமணி உள்பட உதவி மேலாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story