சேவூர் அருகே கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் பலி
சேவூர் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாமாக உயிரிழந்தார்.
சேவூர்,
திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த தத்தனூர் ஊராட்சி சாவக்காட்டுப்பாளையத்தில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி கடந்த 3–ந்தேதி சாவக்காட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு போட்டிகள் நடந்தன.
மேலும் வழுக்கு மரம் ஏறும் போட்டிக்காக 25 அடி உயரத்தில் மூங்கிலால் ஆன வழுக்குமரம் அமைக்கப்பட்டது. இந்த வழுக்கு மரத்தின் உச்சியில் பரிசு பொருட்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் வழுக்கு மரத்தில் எண்ணெய் விடப்பட்டு இருந்தது. இதையடுத்து போட்டி தொடங்கியதும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வழுக்கு மரத்தின் உச்சியில் இருந்த பரிசு பொருளை எடுக்க போட்டிபோட்டு ஏறினார்கள். உற்சாக மிகுதியில் பாதி தூரம் வரை வழுக்கு மரத்தில் ஏறிய இளைஞர்களால், அதற்கு மேல் ஏற முடியவில்லை. ஏனெனில் தொடர்ந்து அந்த வழுக்கு மரத்தில் எண்ணெயை விட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சாவக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவரது மகன் அரங்கசாமி (வயது 25) என்பவர் வழுக்கு மரத்தின் மீது ஏறினார். அப்போது சுற்றி இருந்த பொதுமக்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். இதையடுத்து உற்சாக மிகுதியில் வழுக்கு மரத்தின் உச்சிக்கு சென்ற அரங்கசாமி வெற்றி பெற்று விட்ட அதிர்ச்சியில் கம்பத்தின் உச்சியில் இருந்த பரிசு பொருளை பிரித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கு மரத்தின் உச்சியில் இருந்து தவறி அரங்கசாமி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அரங்கசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அரங்கசாமி, நேற்று முன்தினம் உயிரி£ந்தார். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.