பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி


பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி
x
தினத்தந்தி 10 Sep 2018 10:45 PM GMT (Updated: 10 Sep 2018 4:48 PM GMT)

பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. வருவாய் இழப்பை தடுக்க சப்–ஜெயிலாக மாறுமா? என எதிர்பார்ப்பு உள்ளது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் பழமையான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் உள்ளது. இங்கு கடந்த 1981–ம் ஆண்டு சப்–ஜெயில் தொடங்கப்பட்டது. இங்கு பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு சப்–ஜெயில், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சிறையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு 19 வயது முதல் 21 வரை உள்ள கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டனர். இங்கு 97 கைதிகள் வரை அடைத்து பாதுகாக்கலாம். ஆனால் கடந்த சில நாட்களாக எந்த கைதியும் இல்லாமல் இருந்தது. ஆனால் சிறை சூப்பிரண்டு உள்பட போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த வாரம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் அடி–தடி வழக்கில் ஹரிபிரசாத் என்கிற சுருட்டை ஹரி (வயது 20) என்பவரை கைது செய்து அடைத்தனர். தற்போது ஒரே ஒரு கைதி மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் அதே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

இங்கு சிறை சூப்பிரண்டு, 2 முதன்மை வார்டன், 3 போலீசார், ஒரு துப்புரவு பணியாளர் உள்ளார். இதில் 3 போலீசார் மற்றும் ஒரு சமையல் பணியிடம் காலியாக உள்ளது. சிறுவர் சீர்திருத்த பள்ளி தொடங்கப்பட்ட பிறகு, கோவை, உடுமலை, திருப்பூர், நீலகிரியில் இருந்து போலீசார் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்து உள்ளனர். தற்போது கோவை மத்திய சிறையிலேயே 19 முதல் 21 வயது வரை உள்ளவர்களை அடைப்பதால், பொள்ளாச்சிக்கு யாரும் வருவதில்லை.

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கைதிகளுக்கு படிக்க பகவத் கீதை, குர்ரான், பைபிள் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இது தவிர செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட உபகரணங்கள் உள்ளன. வாரத்தில் ஒரு நாள் சினிமா படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. மேலும் சிறையிலேயே காணொலி காட்சி மூலம் கோர்ட்டு வழக்குகளிலும் ஆஜராகும் வசதி உள்ளது. எனவே சப்–ஜெயிலாக மாற்ற உயர் அதிகாரிகள் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் மீரான் மொய்தீன் கூறியதாவது:–

பொள்ளாச்சியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி இருப்பதால் எந்தவித பயனும் இல்லை. இங்கு அடைக்கப்படும் கைதிகள் வழக்குகளில் ஆஜராக கோவையில் மாவட்ட சிறுவர் நீதிமன்றம் உள்ளது. இதற்காக பொள்ளாச்சியில் இருந்து 45 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது. தற்போது பொள்ளாச்சியில் ஒரு கைதி மட்டும் அடைக்கப்பட்டு உள்ளார். இதனால் சிறை அதிகாரி, போலீசாருக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகள் உள்பட மாதந்தோறும் ரூ.5 லட்சம் வீணாகிறது. பொள்ளாச்சியில் சப்–ஜெயில் தொடங்கினால் கொலை, போதை வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் தவிர 22 வயதுக்கு மேல் உள்ள அனைத்து கைதிகளையும் அடைத்து கொள்ளலாம்.

இதன் மூலம் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளை சேர்ந்த கைதிகளை கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டிய இருக்காது.

மேலும் 19 வயது முதல் 21 வயது வரை உள்ள கைதிகள் பெரும்பாலும் முதல் முறையாக குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டு இருப்பார்கள். இவர்களுடன் 19 முதல் 21 வயது வரை உள்ள கைதிகளை அடைப்பதால், சிறையில் எல்லா பழக்க வழக்கங்களை பழகி விட்டு சிறையை விட்டு வெளியே வந்ததும் பெரிய குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

தற்போது வழக்குகளில் ஆஜராக கோவையில் இருந்து கைதிகளை பொள்ளாச்சிக்கு அழைத்து வர வேண்டிய உள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஒரு சில நேரங்களில் கைதிகள் தப்பி ஓடி விடுகின்றனர்.வக்கீல்களும் கைதிகளை சந்தித்து வழக்கு சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கு கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது. எனவே பொள்ளாச்சி சப்–ஜெயில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாற்றினால்தான் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story