மதுரையில் தண்ணீர் லாரி மோதி லிப்ட் கேட்டு சென்ற மாணவன் பலி


மதுரையில் தண்ணீர் லாரி மோதி லிப்ட் கேட்டு சென்ற மாணவன் பலி
x
தினத்தந்தி 11 Sept 2018 3:45 AM IST (Updated: 10 Sept 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் லிப்ட் கேட்டு சென்ற பிளஸ்–2 மாணவன் உடல் நசுங்கி பலியானார்.

மதுரை,

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் அஜீத் (வயது 17). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று காலை இவர் பள்ளிக்கு செல்ல ஒத்தக்கடையில் பஸ்சில் ஏறி மாவட்ட கோர்ட்டு பகுதியில் இறங்கி நடந்து சென்றார்.

அப்போது பள்ளிக்கு விரைந்து செல்வதற்காக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விக்னேஷ் என்பவரிடம் லிப்ட் கேட்டார். அவரும் அஜீத்தை ஏற்றிக்கொண்டு பாண்டியன் ஓட்டல் பின்புறம் நத்தம் சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி ஒப்பந்த தண்ணீர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரியின் டயர் அஜித் உடலில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விக்னேஷ் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் கோவிந்தராஜ்(39) என்பவரை கைது செய்தனர்.


Next Story